05 ஜூன் 2010

அழகான தவறுகள்.

அழகான தவறுகள்.
அழுகைச் சத்தம்!
உணர்ந்து கொண்டேன்.
நான் பிறந்து விட்டேன்.
உடல் சொல்லுமாமே...?
நான் இவனென்று.
இனிப்புகள் சுவைக்கப்பட்டன.
குழந்தையில்
கலந்தே கிடைக்கப்பெற்றன.
இவனதும் இவளதும்
வளர் பருவத்தில்
பல்லாங்குழியும் தாயமும்
மனதுக்குப் பிடித்தன.
கிட்டயும் பம்பரமும்
கரங்களில் திணிக்கப்பட்டன.
பின்புறம் இடுப்பு வரை
பாவாடையை தூக்கி
முன்புறம் முட்டியைப்
பாவாடையால் மூடி
சிறுநீர் கழிக்க ஆசை.
அரைக்கால் டவுசருக்குள்
அம்மணம் அமுக்கப்பட்டது.
மனம் மஞ்சளை நாடியது
உடல் சவரக்கடைக்குள் தள்ளப்பட்டது.
பூ தாகத்தால்
தலை முடி வறண்டு போனது.
கைகள் கல் சாமிகளுக்குப்
பூக்களை மாலையாக்கியது.
உடல்
நான் இவன் என்றது
மனம்
நான் இவள் என்றது.
அவர்கள் புறம் பார்த்தார்கள்
நான் அகம் பார்த்தேன்.
என் வெளி அழகானது.
இறைவனின்
அழகான தவறுகளில்
நானும் ஒன்று.

கருத்துகள் இல்லை: