17 செப்டம்பர் 2012

நம் சுகமா... குழந்தைகளின் வாழ்க்கையா.... எது முக்கியம்?


                 கடந்த வாரத்தில், எங்கள் ஏரியாவில் உள்ள ஒரு கடையில் நடந்த சம்பவம். ஒரு தந்தை தன்  மகளுடன் (6 அல்லது 7 வயதிருக்கும்) கடைக்கு வந்து அவருக்கு 3 சிகரெட்டுகளும் அவரின் மகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கினார். அதற்கான பணத்தையும் தந்தார். கடைக்காரர்  பொருள்களுக்கான விலை போக மீதம் காசை அவரிடம் தரும்போது, அவர் மீண்டும் கடைக்காரரிடம்,  ஒரு பால் பாக்கெட் தருமாறு கேட்டார். கடைக்காரர் இன்னும் ஒரு 8 ரூபாய் வேண்டுமென்று சொன்னார். அதற்க்கு அவர், எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பிறகு தருகிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கடைக்காரர், கொடுத்த பால் பாக்கெட்டைத்  திரும்பவும் வாங்கிகொண்டு, ஏற்கனவே நிறைய பாக்கி இருக்கிறது... அதைக் கொடுத்துவிட்டு பிறகு புதிய கடன் வாங்கிகொள் என்றார். இந்தப் பேச்சுவார்த்தை  நடந்துகொண்டிருக்கும்போது, கடையில் மேலும் சிலரும் இருந்தனர்.
      அந்த தந்தை உடனே அவரின் மகளிடம் "நீ நாளை இந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி கொள்ளேன் இன்றைக்கு நாம் பால் பாக்கெட் வாங்கிகொள்வோம்" என்றார். அந்தக் குழந்தை, "இந்த பிஸ்கட் பாக்கெட்  எவ்வளவு?' என்று கேட்டது. அவர் "20 ருபாய்" என்று கூறி அந்த பிஸ்கட் பாக்கெட்டை கேட்டுக் கொண்டிருந்தார்.  அதே நேரத்தில் கடைக்காரரையும் திட்ட ஆரம்பித்து விட்டிருந்தார். இதற்கிடையில், அந்தக் குழந்தை பிஸ்கட் பாக்கட்டை பிரித்து விட்டிருந்தது. அவரின் கோபம் இன்னும் அதிகமாகியது - இரண்டு விசயங்களுக்காக - ஒன்று, பிஸ்கட் பாக்கட்டை கொடுத்து பால் பாக்கட் வாங்க முடியாமைக்காக... இரண்டு, பல பேர் முன்னால்  தான் கடனுக்காக அவமானப் படுத்தப்பட்டதர்காக.
        எனக்கு அவரின் கோபத்தின் மேல் கரிசனம் ஏற்படவில்லை. ஏனென்றால், அந்தக் குழந்தையிடம் இருந்த ஒரு பிஸ்கட் பாக்கட்டை  வாங்குவதற்குப்  பதிலாக அவரிடம் இருந்த மூன்று சிகரெட்டுகளில் இரண்டை கொடுத்து அந்த பால் பாக்கெட்டை வாங்கியிருக்கலாம். என்ன ஒரு எண்ணம் பாருங்களேன், நமது சுகம் நமக்கு அதி முக்கியமாக இருக்கிரத்து. ஒரு குழந்தையின் தேவை நமக்கு இரண்டாம் பட்சம் அல்லது மூன்றாம் பட்சமாகத்தான் இருக்கிறது.
        மற்றும் ஒரு நிகழ்வு, ஒரு  சாலை விபத்து. அந்த மோட்டார் பைக்கில் அந்த சிறுவனையும் (6 அல்லது 7 வயதிருக்கும்) சேர்த்து மூவர். ஒருவர் அச் சிறுவனின் தந்தை, மற்றொருவர் அவனின் தாத்தா. சிறுவனைத் தவிர அவர்கள் இருவரும் மது அருந்தியிருந்தனர். வாகனத்தை ஒட்டி வந்தவரின் சட்டையை சாலையோரத்தில் இருந்த  முள் செடி பிடித்து இழுத்து விட, நிலை தடுமாறி, கட்டுப்பாடை  இழந்து வண்டியோடு கீழே விழுந்துவிட்டனர். நல்ல வேலையாக, மூவருக்கும் உயிர் ஆபத்து இல்லை. ஆனால், இதில் கவனித்துப் பாருங்கள், குடிப்பதே ஒரு கெட்ட  செயல். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தேவையற்ற செயல், அதிலும் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது கேவலமான கேடு கெட்ட  செயல் அல்லவா. இங்கும், நமது சுகமும் தேவையும் தான் பிரதானமாகப் படுகிறதே அன்றி, குழந்தைகளின் தேவைகளும், விருப்பங்களும், உயிரும் நமக்கு இரண்டாம் பட்சம் அல்லது மூன்றாம் பட்சமாகவே தெரிகிறது.
        எங்கே செல்கிறது உலகம்......?