08 பிப்ரவரி 2011

அம்மா!

அம்மா!
நான் உயிர் வாழ
தன் உதிரம் கொடுத்தவள்.
என்னை உதிர்க்காமல்
உலகம் காணச் செய்தவள்.
பல இரவுகள் எனக்காக
உறக்கம் உதிர்த்தவள்.
உணவை தன் குருதி
தந்தவள்.
என் தந்தையை எனக்கு
அறிமுகம் செய்தவள்.
என் அழுகையின்
பொருளை உணர்ந்தவள்.
என் சிரிப்பில்
சிலாகித்தவள்
தன் மடியை
எனக்கு மெத்தை ஆக்கியவள்.
எனக்கு இயற்கையை
அறிமுகம் செய்தவள்.
இயற்கையோடு என்னை
ஒப்பீடு செய்தவள்.
வெண் மதியை
எனக்காய்
பூக்காரி ஆக்கியவள்.
என் வெள்ளை சிரிப்பில்
தன் உள்ளம் குளிர்ந்தவள்.
என் வளர்ச்சியை
ஆவலாய் உற்று நோக்கியவள்.
என் பாதையை
செம்மையாக்கியவள்.
என் நோயில்
அவள் உடல் சிறுத்தவள்.
உள்ளம் அழுதவள்.
எனக்காய் அனைத்தையும்
இழந்தவள்.
அம்மா!

06 பிப்ரவரி 2011

பிப்ரவரி 14 - காதல் இனி மெல்லச் சாகும்.

பிப்ரவரி 14 - காதல் இனி மெல்லச் சாகும்.
சேலை வேஷ்டி காதலர்களானாலும் சரி, சுடிதார் பேண்ட் காதலர்களானாலும் சரி, எக்காதலர்களுக்கும் அவர்களே உலகம் போலும். சுற்றுப்புறம் அறியாமல், காதல் போர்வையில் காமம் வளர்க்கும் எந்தக் காதலர்களும் கன்றாவிக் காதலர்களே. இராசாசி முதல் காமராசர் வரை அனைவரின் மணி மண்டபங்களும், நினைவிடங்களும் காதலர்கள் வாழுமிடங்கலே, காதல் சமாதிகளே, காமக் கூடாரங்களே
என்றோ ஒரு நாள் பொழியும் மழை, மண்ணுக்கு வளம் சேர்க்காது. அங்கொன்றும் இன்கோன்றுமாய்த் தெரியும் கண்ணியக் காதலர்களால் காதல் வாழ்ந்துவிடாது. ஆயினும், காதலுக்கு ஈரம் கொடுக்கும் கண்ணியக் காதலர்களுக்கு நாம் தலை வணங்கத்தான் வேண்டும்.
அவனும் அவளும் கன்றாவிக் காதலர்கள். காந்தியை போன்றே மொட்டையாக நின்ற மரங்களைக் கடந்து மண்டபம் நுழைந்து வலப்புறம் திரும்பி, வாயிலை நோக்கி நடக்கும் போது, பிரதான வாயிலுக்கும் வலப்புற வாயிலுக்கும் இடையே, நண்பர்கள் குழாமோ, காதல் கூட்டமோ...ஆண் பெண்ணாய் நால்வர். அவர்களில் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்தது. காந்தியைக் கடந்து, விடுதலைப் போராட்டத் தியாகிகளைச் சந்தித்து மொழிப்போர் தியாகிகளில் எத்தனை பேர் சாதியைத் தனதாக்கி பெயருக்குப் பின் சேர்த்துள்ளனர் என கணக்கிட்டுக் கொண்டே கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே காய்ந்த புற்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டந்தரையை நோக்கி சற்றே தலை நிமிர்ந்தால், பக்தவச்சலத்திர்க்குப் பின்னால் ஒரு இடுக்கில், அவள் இடுப்பை வளைத்துக் கொண்டு அவன். என் கால்கள் நகர மறுத்து கண்களையும் துணைக்கு அழைத்தன. கண்ணாடியைத் தாண்டி கண்கள் பயணித்தன. கால்கள் கட்டப்பட்டன.
கண்டராவியைக் காண்போம். இடுப்பை வளைத்து, இழுத்து அனைத்து, காதலைத் தொலைத்து, காமத்தை எடுத்து அவள் கிறங்க, அவள் உதடுகளும் அவன் உதடுகளும் நீண்ட ஏதும் செய்வதறியாமல் திணறிக் கொண்டிருந்தன. என் கண்களும். அப்பாட, ஒரு வழியாய் விடுபட்டன. அவர்களின் உதடுகளும் என் கண்களும். அவர்கள் பிரிந்து, பக்தவச்சலத்திர்க்கு அருகாமையில் சில அடிகள் தவிர்த்து ஒருவர் மட்டுமே அமரக்கூடிய மற்றொரு இடுக்கில் இருவரும் அமர்ந்தனர். இதயங்கள் உரசிக் கொண்டனவோ என்னவோ, இருவரும் உரசிக் கொண்டனர்.
என் கால்கள் என் கட்டளைக்குப் பணிந்து, தியாகிகளைப் பிரிந்து, பக்தவச்சலத்தை காணப் புறப்படுகையில் இரு வேறு இளைன்கர்கள் என் இடத்தை ஆக்கிரமித்தனர். காதலுக்காக அழுவதா... கன்றாவிக் காதலர்களை சபிப்பதா.... என் போன்றோரின் கண்களைக் கலவாடுவதா... என்ற மிகப் பெரிய குழப்பத்துடன் பக்தவச்சலத்தைப் பார்க்கப் போனேன். அப்படியே காமராசரையும் கண்டு, படியிறங்கி நேரே சென்று அவரின் சிலை பார்த்து, வலப்புறம் திரும்பி, நேரே வந்து, மீண்டும் இடப்புறம் திரும்பி பக்தவச்சலத்தின் ஒருபுறம் தொட்டு, மறுபுறம் கடக்கையில், கட்டளைக்குப் பணியாத என் கண்கள், மீண்டும் அந்தக் கடைக்கோடி இடுக்கைப் பார்த்தன. இன்னும், அங்கு உடல்கள் உரசிக்கொண்டுதாநிருந்தன. என் கண்கள் கண்டிப்பாய் களவாடப்பட வேண்டியவைதான்.
கிலுக்கம் (கிளு கிளுப்பு + கலக்கம்) நிறைந்த மனதுடன் இரு வேறு தியகிகளிடமும், காந்தியிடமும் பாராமுகம் செய்து, இராசாசியை சென்றடைந்தேன். அங்கு அவரைச் சுற்றி வந்தால், அவருக்குப் பின் புறத்திலும், காதல் கொலை. அநேகமாய், அந்த அரை மைல் தொலைவிலும், ஆங்காங்கே மறைந்து நின்ற காதலர்கள், காதலை கதற கதற கற்பழித்து கொலை செய்து கொண்டிருந்தனர். மனத்தால் கண்கள் மூடி, மொழிப்போர் தியாகிகளின் உறைவிடம் வந்து சேர்ந்தேன். அவர்களுக்குப் பக்கத்தில் குடியிருந்த பக்தவச்சலத்தின், பக்கத்தில், சில அடிகள் தவிர்த்த இடுக்கில், நாம் முன்னரே கண்ட அவளையும் அவனையும் காணவில்லை. ஆனால், பல கண்கள் பக்தவச்சலத்தின் பின் புரத்தை மேய்ந்து கொண்டிருந்தன. அவனும் அவளும் அவர்களிருவரையுமே மேய்ந்து கொண்டிருந்தனர்.
நான் தியாகிகளின் முன்னாள் அமர்ந்து எழுதத் துவங்கி விட்டேன். இக் க(தை) ட்டுரையின் இரண்டாம் பத்தி எழுதிகொண்டிருக்கும் பொது, கன்றாவிக் காதலர்கள் இருவரும், ஒருவருக்கொருவர் சில அன்டுலங்கள் இடை வெளி விட்டு என்னைக் கடந்து நடந்து சென்றார்கள். உண்மையில், அவர்கள் மிதந்து சென்றார்கள்.
என் எழுத்து தொடர்ந்து கொண்டே இருந்தது. சில கணங்கள் கழித்து, பக்தவச்சலத்தின் பக்கத்து இடுக்கை மற்றொரு சோடி ஆக்கிரமித்து அதன் பங்கிற்கு காதலுக்கு சேவை செய்து கொண்டிருந்தது.
எனக்கு ஒன்று புரிந்தது.
"காதல் இனி மெல்லச் சாகும் - காதலர்களால்"
பி.கு. : மேலே உள்ளக் கட்டுரை / கதை, நான் சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது (2006), கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிர் புறம் அமைந்துள்ள தியாகிகள் மணிமண்டபம் / நினைவிடங்களில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து எழுதப்பட்டது. இது எழுதப்பட்டதும் 2006 ஆம் ஆண்டின் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில்தான்.