03 நவம்பர் 2019

பதினெட்டு முடிஞ்சு பத்தொம்போது

"அப்பா.... நீ பெரிய அறிவாளிப்பா..."
"ஆனா பிள்ள... நீ ஒரு முட்டாள் தெரியுமா..."
"ஏன்...?"
"நான் அறிவாளிங்கறதுனால தான் உன்ன கட்டிக்கிட்டேன்...
நீ முட்டாள்ங்கிறதுனால தான் என்ன கட்டிருக்க.... ஹா ஹா ஹா...."
"போயாங்ங்ங்...."  

நெஜமாவே, எனக்கு பயமாத்தான் இருந்துச்சு... பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி, நாம மொத மொதலா பாத்தப்ப, எனக்கு நீ ஒரு முழு டம்ளர் 'டீ' ல அரை டம்ளர் 'சீனி' போட்டு கலந்து தர்ற வரைக்கும்.  இன்னைக்கு வரைக்கும் அந்த தித்திப்பு என் மனசுல அப்படியே தான் இருக்கு. நான் எப்போலாம் பின்னாடி போறேனோ, அப்போல்லாம் என்னய இழுத்து ஒனக்கு முன்னாடி விட்ரும்.

அது எப்படி பிள்ள.... நான் ஒனக்கு கட்டுன கயிற வச்சே, என்னோட மனசையும் ஒடம்பையும் ஒன்னோட சேத்துக் கட்டி வச்சுக்கிட்ட...?
இன்னைக்கு வரைக்கும், பள்ளங்கள மூடுற போதும்... மேடுகள கடக்குறபோதும்.... உன்ன நானும், என்ன நீயும் விட முடீறதே இல்ல.

எத்தன தடவ உன்ன நீ முட்டாள்னு, என்னால, உணர்ந்துருப்பியோ எனக்குத் தெரியாது. ஆனா, நீ அறிவாளி தான்னு என்ன ஒவ்வொரு நொடியும் இப்போ வரைக்கும் ஒனரச் செஞ்சுட்டேதான் இருக்க. 

நம்ம ரெண்டுபேருக்கும் இடைல  இருக்குற அன்பு, பாசம், காதல், காமம், ஆசை, சிரிப்பு லாந்தான், நம்மள பாத்து அப்பப்போ  வர்ற கோபம், அயர்ச்சி, வெறுப்பு, சந்தேகம் எல்லாத்தையும் வெறட்டி விட்டுட்டு நம்மள ஆச்சரிய பட வச்சுட்டு இருக்குது.... நம்ம மூளைல  'என்டோர்பின்'ன சுரக்க வக்கிது. 

இன்னமும், நம்மள கேக்கத்தான செய்ய்யுறாங்க.... நீங்க லவ் மேரேஜா னு...? அவுங்களுக்கு, அந்த சந்தேகம் அப்டியே இருக்கட்டும்..... நாம , அந்த சந்தேகத்த அவுங்களுக்கு அதிகப்படுத்திகிட்டே... அப்டியே,  
          பத்தொம்போதாவது வருசத்துக்குள்ள போயிருவோம்....

                  "எல்லோருக்குமான எனது எல்லாமும் உனக்கும் உண்டு. 
                  உனக்கான எனது எதுவும் எவருக்கும் இல்லை"

                #திருமணநாள் #சங்கீமாகாதல் #04thNovember