16 நவம்பர் 2015

சிறந்த தம்பதி!!!

சிறந்த தம்பதிக்கான போட்டியின் நெறியாளர் கேட்டார்: உங்கள் கணவர் / மனைவியோடு நீங்கள் முதலில் பார்த்த படம் எது? கணவன் கூறினான் : "யாரடி நீ மோகினி". மனைவி கூறினாள் : இல்லை இல்லை... "கண்டேன் காதலை". கணவன் சிரித்தான், விசமமாக.

15 நவம்பர் 2015

நட்பு.....காதல்.....காமம்....

தெரியாதது போன்றே
நீ நடந்து கொள்வதும்,
உனக்கு தெரியாதென்றே
நான் நம்புவதும் தான்
நம்மை இன்னும் இயக்குகிறது. 

11 நவம்பர் 2015

சங்கரன் கோயிலில் ஒரு கசப்பான அனுபவம்: நான் ஏன் மதம் மாறக் கூடாது....?

                                  நேற்றைய சங்கரன் கோயில் பயணம் மிகவும் வெறுப்பைத் தருவதாகவும், வருத்தப் படச் செய்வதாகவும் அமைந்தது. கோவில் வாசலில்  இறங்கிய உடனே, இருவர் எங்களை மறித்து செருப்புகளை இவ்விடத்தில் (A1 திவ்யா பேக்கரி மற்றும் A1 திவ்யா ஸ்வீட்ஸ் க்கு நடுவில் இருக்கும் கடை) இலவசமாகப் பாதுகாத்துத் தருகிறோம் என்றும், உள்ளே காலணிகள் பாதுகாக்கும் இடம் இல்லை என்றும் கூறி, டோக்கன் வாங்கிக் கொள்ள கூறினர்.




அதற்குப் பின் தான், அவர்களின் விளையாட்டு ஆரம்பித்தது. அர்ச்சனை தட்டில் ஒரு தேங்காய் வைத்தால் 40 ரூபாய் என்றும்,  தேங்காய் வைத்தால் 80 ரூபாய் என்றும் கூறி எத்தனை தேங்காய் வைக்க வேண்டும் எனக் கேட்டார். நானும் ஒரு தேங்காய் போதும் என்றேன். அடுத்தடுத்து, பன்னீர் பாட்டில், பழம் மற்றும் இதரப் பொருள்களை வைத்து, ஒரு மாலையா இரண்டு மாலையா எனக் கேட்டார். நானும், ஒரு மாலை போதும் என்றேன். உப்பு மிளகு மற்றும் சிறிய பாம்பு தேள் தகடுகள் வேண்டுமா என்றார். நான் உப்பு மிளகு மட்டும் போதும் என்று கூறி, மொத்தம் எவ்வளவு விலை என்றேன். கணக்குப் பார்த்து 210 ரூபாய் என்றார். அதிர்ச்சியோடு 210 ரூபாய் கொடுத்துவிட்டு, உள்ளே காலணிகள்  இடம் ஒன்று கூட இல்லையா என்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து ஒன்றும் கூறாமல், எனக்கு மீதம் பணத்தைக் கொடுத்தார். நான் சற்று கோபமாகவே, உள்ளே வேறு ஏதாவது காலணிகள் பாதுகாக்கும் இடம் இருந்தால், உங்களிடம் கோபப் படுவேன் என்று கூறினேன். உடனே அவர், இதெல்லாம் வியாபரத்திற்காகத் தான் சார் என்றார். நான், இப்படியெல்லாம் ஏமாத்தாதிர்கள் என்று வருத்ததோடு சொன்னேன். மீண்டும் அவர், முன்னர் கூறியதையே கூறினார். நாங்கள் ஏமாற்றப் பட்டோம் என்பதையும், ஏமாந்தோம் என்பதையும் வருத்தத்தோடு நினைத்து நொந்து கொண்டு கோயிலுக்கு உள்ளே சென்றோம்.
             உள்ளே, எல்லா கோயிலிலும் இருப்பது போல, இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் (10 ரூபாய் தரிசனம்) வரிசை. கோபத்தோடும் அதற்கு மேலே வருத்தத்தோடும் இருந்ததால், இலவச தரிசன வரிசையிலேயே நின்றோம். உள்ளே, அர்ச்சனைக்கு ஐயரிடம் 210 ரூபாய் அர்ச்சனை தட்டை கொடுத்துவிட்டு காத்திருந்தோம்.




             கடவுளிடம், விளக்குப் பிடித்து மணி ஆட்டிவிட்டு  தட்டை எங்களிடம் கொடுத்துவிட்டு சைகையில் பணம் கேட்டார். 10 ரூபாய் கொடுத்தோம். அவர் இரண்டு என்று சைகையில் 20 ரூபாய் கேட்டார். வருத்தம் மேலோங்க போட்டு விட்டு வந்தோம்.
           செருப்பைக் கழட்டியத்தில் இருந்து....இலவச மற்றும் சிறப்பு தரிசன வரிசைகளை பார்த்து உள்ளே சென்று ஐயருக்கு 20 ரூபாய் போட்டு விட்டு வந்தது வரை உஎன் மனதிற்குள்ளே ஒரே ஒரு கேள்வி மட்டும் சுழன்றடித்துக் கொண்டிருந்தது: நான் ஏன் மதம் மாறிவிடக் கூடாது? நான் அறிந்து, அனைத்து இந்து கோவில்களிலும் இப்படித்தான் நடக்கிறது - சபரி  மலை, திருச்செந்தூர் போன்ற கோவில்கள் உள்பட.  கோவிலுக்கு வெளியே இருந்து உள்ளே கர்ப்ப கிரகம் வரை ஏமாந்து போகிறோம் அல்லது ஏமாற்றப் படுகிறோம். மன நிம்மதிக்காகவோ அல்லது மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ கோவிலுக்கு சென்றால், அது கிடைக்கிறதா என்றால்.... அது நிச்சயமாகக் கிடைப்பதில்லை. வருத்தமும், ஏமாற்றமும், கோபமும் தான் மிஞ்சுகிறது.



 குடும்பத்தோடு செல்லும் போது மேற்கூறிய மூன்றையுமே வெளி காண்பிக்க முடிவதில்லை. ஏதோ ஒன்று தடுக்கிறது.
            ஏமாந்து, வருத்தப்பட்டு, கோபப்பட்டு..... எதற்காக சென்றோமோ அதுவும் கிடைக்காமல் கோவிலை விட்டு வெளியே வருவதற்கு பதிலாக, கோவிலுக்கே செல்லாமல் இருந்துவிட்டால் என்ன என்றே தோன்றுகிறது. சரி, இந்த அவமானங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு சென்று கோவில் வரலாறையோ, பூஜை புனஸ்கார  முறைகளையோ, சாமி கும்பிடுவதன் அவசியத்தையோ, வேதங்களின் செய்திகளையோ தெரிந்து கொள்வோம் என்றால், அதுவம் முடிவதில்லை. அங்கு இருப்பவர்களுக்கும் தெரிவதில்லை. இச்சமயத்தில்தான், சிறுபிள்ளைகளை ஏன் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. நமக்கு, கோவில் விசயங்கள் தெரிவதில்லை. கோவிலில் இருக்கும் மேதாவிகளுக்கும் அது தெரிவதில்லை.
           இப்படி, எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத ஒரு இடத்திற்கு, எதுவுமே எனக்கு கிடைக்க முடியாத ஒரு இடத்திற்கு, எதுவும் தெரியாத கூட்டம் இருக்கும் ஒரு இடத்திற்கு நான் ஏன் செல்ல வேண்டும்? சம்பிரதாயத்திற்கா.....? எனக்கு வேண்டியதை, நான் தெரிந்து கொள்ள வேண்டியதை எனக்குத் தெரியப் படுத்த முடியாத ஒரு மதத்தை நான் ஏன் சார்ந்து இருக்க வேண்டும்? சம்பிரதாயத்திற்கா....?
           இக்கேள்விகள் மனதை அறுக்கின்றன. குழப்பம்தான் மிஞ்சுகிறது. எதை சார்ந்து இருக்க.... எதை தழுவ.....எதிலிருந்து தெரிந்து கொள்ள....? எதுவும் தெரியவில்லை. மதம் இல்லா ஒரு மதம் இருக்கிறதா....? எல்லாரையும் சமமாகப் பாவிக்கும் ஒரு மதம் இருக்கிறதா....? நல்ல விசயங்களை - ஒழுக்கங்களை சொல்லித் தரும், அதை கடைபிடிக்கும் ஒரு கோயில் இருக்கிறதா....? அது மதமாக இல்லாவிடினும்,  ஏதோவொரு "இசமாக" இருந்தாலும் அதை ஆரத் தழுவி கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. இந்துத்துவமும் இதைதான் எதிர்பார்க்கிறதோ....?





          பவுத்தமும், இஸ்லாமும் இதைத் தருமோ என்ற கேள்வியும் எஞ்சுகிறது. கிறித்துவம் அதைப் புதைத்து விட்டதை உணர்ந்தே இருக்கிறேன் - முக்கியமாக இந்தியக் கிறித்துவத்தில்.



நான் ஒருவன் மதம் மாறினால், இதெல்லாம் சரியாகி விடுமா.....? நான் ஒருவன் மதம் மாறுவதாகக் கூறினால் அவர்கள் எல்லாம் சரியாகிவிடுவார்களா என்றால், உண்மையில் அதற்கான விடை எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நான் இவ்விசயத்தில் ஒரு அழிக்க  முடியாத ஆரம்பப் புள்ளியாக இருப்பேன். நான் இடும் இப்புள்ளி, கோடாக மாறி, அதி விரைவில் மிகப் பெரிய மாற்றத்திற்கான பாதையாக உருப்பெறும்!!!!



                    நான் ஏன் மதம் மாறக் கூடாது.....மதம் இல்லா மதத்திற்கு?

          

03 நவம்பர் 2015

உயிர் வேண்டும்.

கொஞ்சம் நீ சிரிப்பதை
நிறுத்திக்கொள்ளேன்.....
நான்
உயிர் பெற வேண்டும்.