17 டிசம்பர் 2015

சபரிமலை செல்லும் ஐயப்ப சாமிகளுக்கு இதெல்லாம் சாத்தியம்தானா....?சாமி சரணம்!!!!

சாமி சரணம்!!!! சபரிமலை க்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வர பக்தகோடிகள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சாமியை நினைத்து கொண்டிருக்கும் காலம் இது.  
அய்யப்ப விரதம் (அகத்திய மாமுனிவர் வகுத்துத்தந்த முறைகள்)
(http://www.maalaimalar.com/2012/12/08135414/ayyappan-virutham.html)
அய்யப்ப விரதம் (அகத்திய மாமுனிவர் வகுத்துத்தந்த முறைகள்)
1.சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (41நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.
2.கருப்பு,நீலம், பச்சை,காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையும் அணிய வேண்டும்.
3.கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம். 
4.அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி அய்யப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும்.இதே போல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி 108 சரணம் கூறி அய்யப்பனுக்குப்பூஜை செய்ய வேண்டும். குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்ககூடாது.
5.இரவில் தூங்கும் போது தலையணை,மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதைக் தவிர்க்க வேண்டும்.
6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனோ வலிமையைப் பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. மாதர்கள் யாவரையும் மாதாவாகக் காண வேண்டும். மாதவிலக்குச் சமய மாதர்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.
7.சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும்.மது அருந்தக் கூடாது. பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.
8. திரிகரண  சுத்தி(மனம், வாக்கு, செயல்)ஆகிய வற்றில் கவனமாக இருக்க வேண்டும். அய்யப்பனை எண்ணத்தில் எப்பொழுதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக ஐயன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.
9.சண்டை, சச்சரவுகளில் கலந்து கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.
10.காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம் பாவம்,துவேஷம் முதலிய குணங்களைக் குறைப்பதற்கு உதவ  எப்பொழுதும் அய்யப்பன் திருநாமத்தை உறுதுணையாக் கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்பொழுதும் நிறைந்து நிற்பது அய்யப்பனின் பேரொளி திருவுருவமேயாகும்.
11.உரையாடும் போது சுவாமி சரணம் என்று சொல்லி துவங்குவதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளைத் தரும்.
12.ஒரு அய்யப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என வணங்க வேண்டும்.
13.மாலை அணிந்து காணப்படும் ஆண்களை அய்யப்பன் என்றும் பெண்களை மாளிகைப்புறம் என்றும் சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளைக் கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.
14.குடை, காலணிகள், சூதாடுதல், திரைப்படங்ë களுக்குச்  செல்லுதல் தவிர்க்கப்பட வேண் டும்.
15.விரத காலங்களில் உணவின் அளவைக் குறைத்து உடலைக்குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் பதினைத்து தினங்களுக்காவது ஒரு வேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.
16.இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும் பொழுது ஐயனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
17.கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும் அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.விரத காலங்களில் இயன்ற வரை அன்னதானம் செய்ய வேண்டும்.
18.நமது நெருங்கிய ரத்தத் தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களின் மரணம் ஏற்படுமாயின் மாலையைக் கழற்றி விட வேண்டும்.
19.பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.
20. விரத காலங்களில் தலைமுடி வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்து கொள்வதோ கூடாது.
21.மாலை அணிந்த எந்த அய்யப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாகக்கூடாது.
22.பக்தர்கள் நடத்தும் அய்யப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

 மேற்கூறிய விதிமுறைகளைக் கடைபிடிப்பதோடு, பின்வரும் நெறிமுறைகளையும் அய்யப்ப சாமிகள் கடைப்பிடித்து விரதம் இருந்து, சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து வந்தால், அகமும், புறமும், வீடும், நாடும் நற்பேறு பெற்று வாழ்வாங்கு வாழும்.

1. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் சக ஓட்டுனர்களை பயமுறுத்தாமல் வாகனங்களை குறைந்த வேகத்தில் ஒட்டுதல் வேண்டும்.
2. இரவில் வாகனம் ஓட்டும் போது "தலை விளக்கை" (ஹெட் லைட்) "உயர் கற்றையில்"  (ஹை பீம்) ஒளிர விடாமல், "தாழ் கற்றையில்" (லோ பீம்) ஒளிர விட்டு எதிரில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு பீதியை கிளப்பாமல் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, வளைவுகளில் திரும்பும் போது "வளை காட்டி விளக்கை" (டேர்ன் இன்டிகேடர்) எரிய விடும் போது "தலை விளக்கை" கண்டிப்பாக "தாழ் காற்றையில்" தான் ஒளிர விட வேண்டும்.
3. இருசக்கர வாகனம் ஓட்டும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக தலை கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும்.


4. இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க கூடாது.
5. பேருந்தில் பயணிக்கும் போது, ஓடும் பேருந்தில் ஏறியோ இறங்கியோ, கதாநயகத்துவத்தை வெளிபடுத்தக் கூடாது.
6.வாகனத்தை, வீட்டில் இருந்து வெளியே எடுக்கும் போது "வேகக் குறைப்பானை" (பிரேக்) சரி பார்த்து விட்டு எடுக்க வேண்டும்.
7. வாகனத்தில், வாகனத்தின் அனைத்து ஆவணங்களின் நகல்களும் - பதிவு சான்றிதழ் (ஆர் சி புக்), சாலை வரி (ரோடு டாக்ஸ்), காப்பீடு (இன்சூரன்ஸ்) இருக்க வேண்டும்.
8. வாகனத்தில் செல்லும் போது, சாலையை நடந்து கடப்பவர்களுக்கு முன்னுரிமை தந்து அவர்கள் சாலையைக் கடந்து செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.
9. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர், பயமுறுத்தக்  கூடிய அதிக சத்தமான ஒலிப்பான்களை இயக்கி சாலையில் செல்வோருக்கு "கிலி"  ஏற்படுத்தக் கூடாது.
9. விரத காலத்தில், கடையில் வாங்கும் பொருள்களுக்கு கண்டிப்பாக "விலை குறிப்பு" (பில்) வாங்க வேண்டும்.
10. வரி ஏய்ப்பு செய்யக் கூடாது.
11. மாணவ அய்யப்ப சாமிகள், வகுப்பை "வெட்டாமல்"  (கட்) ஒழுங்காக வகுப்புக்கு வந்து கவனமாக பாடங்களை பயில வேண்டும்.
12. மாணவ அய்யப்ப சாமிகள், ஆசிரிய, ஆசிரியைகளை மரியாதையாக விளித்து பேச வேண்டும்.
13. விரத காலத்தில் தேர்தல் வருமாயின், கட்சி, சாதி, மத, ஊர் வேறுபாடு இன்றி நியாயமான, சிறந்த, மக்கள் பணியாற்றக் கூடிய வேட்பாளருக்கே ஓட்டளிக்க வேண்டும். 
14. அவ்வாறு  இயலவில்லை எனில், "49 ஓ" விற்கு ஓட்டளிக்க வேண்டும்.
15. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கக் கூடாது.
16. பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்களிடம், தைரியமாக நியாயமான கேள்விகளை தயங்காமல் கேட்க வேண்டும்.
17. விரத காலத்திலாவது, கண்டிப்பாக "ரௌத்திரம் பழக" வேண்டும். தவறை - அநியாயத்தைக்  கண்டு கோபப் பட வேண்டும்.
18. கடையில் பொருள்கள் வாங்க செல்லும் போது, கண்டிப்பாக மஞ்சள் பை கொண்டு செல்ல வேண்டும் - பாலித்தின் பைகளையோ, பிளாஸ்டிக் பைகளையோ பயன்படுத்தக் கூடாது.
19. கொக்க கோலா மற்றும் பெப்சி கம்பெனி பானங்களைக் கண்டிப்பாக பருகக் கூடாது.
20. அய்யப்ப சாமிகளின் வீட்டுக் குப்பைகளை, பக்கத்து காலி பிளாட்டில் கொட்டக் கூடாது - விரத காலம் முடிவதற்குள், வசிக்கும் தெருவில் குப்பைத் தொட்டி (இல்லையெனில்) கழிவு நீர் வாறுகால் (இல்லையெனில்) ஏற்படுத்தித் தர வேண்டும்.
21. விரதகாலம் முடிவதற்குள், ஒரு மரக் கன்று நட்டு பராமரிக்க தொடங்க வேண்டும்.
22. தண்ணீரை வீணாக்கக் கூடாது.- கை கால் முகம் கழுவ, குளிக்க, பல் துலக்க தேவையான அளவு தண்ணீரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

மேற்கூறிய விரத வழிமுறைகளைக் கடைபிடித்து, இருமுடி கட்டி, சபரி மலை சென்று ஐயப்பனை தரிசித்து வேண்டி வருவோமாயின் நினைத்த காரியம் நிறைவேறும். நாமும் நாடும் உயருவோம்.
            சாமியே சரணம் ஐயப்பா! சாமியே சரணம் ஐயப்பா!! சாமியே சரணம் ஐயப்பா!!!