17 ஜூன் 2010

நானும் ஆடும்

உன்னையும்
நீ இருக்கும் கொட்டிலையும்
நான் பார்க்கத் தவறுவதில்லை...
ஒவ்வொரு முறையும்
அந்த வீட்டை நான்
கடக்கும்பொழுதும்
நீயும்
என் மீதான
உன் பார்வையை
முடிந்த வரை தவிர்ப்பதில்லை.
சில சமயங்களில்
நான் பார்த்திருக்கிறேன்...
உன்னை ஆட்கொண்டிருக்கும்
பசி
அடங்குமலவுக்கு மட்டும்
சிறு புல் கட்டோ
இல்லை தழைகளோ
உன் முன் பரப்பப்பட்டிருக்கும்.
மிக மகிழ்ச்சியோடு
நீ உண்ணத் தொடங்கியிருப்பாய் .
பல வேலைகளில்
உன் முன்
உன் பசி தேவைக்கும்
அதிகமான
மாமிசப் படையல்
படைக்கப்பட்டிருக்கும்.
நீ
அதனை வெறுத்து
மறு நாள் உனக்கு
அளிக்கப்படவிருக்கும்
புல் கட்டுக்காய்
காத்துக்கொண்டிருப்பாய்.
நான் வெட்கி சிறுத்து
தலை குனிந்து
உன்னைக்
கடந்துவிடுவேன்.
என்னை
சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.
நானும் பசித்திருந்திருக்கின்றேன்
எனக்கும் உன்னைப் போலவே
உணவு வழங்கப்பட்டிருக்கிறது
சில சமயம்
என் உடலுக்கு
உகந்த உணவு.
பல வேளைகளில்
எனக்கு சிறிதும் ஒவ்வாத
மலமும் சிறுநீரும்.
உன்னைப் போல
எதுவும் உண்ணாமல்
பசியை வெல்ல
என்னால் இயலாது.
மலத்தை வழித்து
தின்றுவிடுவேன்.
சிறுநீரை மண்டியிட்டு
நக்கி குடித்துவிடுவேன்.
பசியை தனித்துக் கொள்வேன்
இப்போதெல்லாம்
முன்னைப் போலில்லை.
மலம் மணக்கத் தொடங்கிவிட்டது
சிறுநீர்
சர்க்கரைப் பாகாகிவிட்டது.
இச் சில நாட்களாகதான்
நான் உன்னைக் கண்டு
வெட்கிச் சிறுத்து விடுகிறேன்.
உன் மேல் பொறாமையும் கூட.
நானும் ஆடாகப் பிறந்திருக்க வேண்டும்.
பரவயில்லை.
இப்பிறவியை
மணக்கும் மலத்துடனும்
இனிக்கும் சிறுநீருடனும்
மனிதனாகவே
கழித்துவிடுகின்றேன்.
என்
அடுத்த பிறவி
ஆடாக
அமைய
நீயும் வேண்டிக்கொள்.



கருத்துகள் இல்லை: