24 ஏப்ரல் 2017

வாசிப்போமா....?

                        முறை படுத்தப் படாத ஒரு வகையான புத்தக வாசிப்புப் பழக்கம், என் சிறு வயதிலிருந்தே இருந்ததாக எனக்கு ஞாபகம். பள்ளிக்கூட நாள்களில் ராணி, ஆனந்த விகடன், குமுதம், அம்புலிமாமா, முத்தாரம், ராணி காமிக்ஸ் புத்தகங்கள் வாசித்திருக்கிறேன்.  பாக்யராஜின் பாக்யா இதற்கு அடுத்த தலைமுறை புத்தகம். இப்போதும் சத்தமில்லாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
                             என் அம்மாவிற்கு கதை புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இப்போதும், ரமணி சந்திரன் புத்தகங்கள் என் அம்மாவின் பிரியங்கள்.  அம்மா அளவிற்கு, அப்பா தீவிரமான புத்தக வாசிப்பாளர் இல்லை. அவரின் பிற்காலத்தில் (தற்போது), வாழ்க்கைத் தத்துவ நூல்களையும், சுய முன்னேற்ற நூல்களையும் வசித்துக் கொண்டிருப்பதை காண்கிறேன். ஆக, எனது வாசிப்புப்  பழக்கம், வார இதழ்களிலும், பாக்கெட் நாவல்களிலும் தான் ஆரம்பித்தது (நல்ல வேலை அப்படியாவது ஆரம்பித்தது...... அம்மாவிற்கு நன்றிகளும், அனுமதித்த அப்பாவிற்கு வணக்கங்களும்).
                             மதுரை தூய மரியன்னை பள்ளி காலங்கள் முழுவதுமே, இப்படித்தான் கழிந்தது. பள்ளி இறுதி வருடங்களில், என் தோழன் பாலசுப்ரமணியன் புண்ணியத்தில் சினிமா பாடல்களின் மேல் நாட்டம் வந்தது..... கேசட்டில் பாடல் பதிவு பண்ண மதுரை ரோடுகளில் திரிந்திருக்கிறோம். ஒவ்வொரு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையிலும் பாலு மாமா, மலை மலரில் (தின மலரில்....?) வெளிவரும் அந்த வாரத்தில் TV இல் இந்தி மொழியில் ஒளிபரப்பாகவிருக்கும் மகாபாரத கதையின் தமிழ் விளக்கத்தை வாசித்து புரியும்படி சொல்லுவார் (உண்மையில், அக்காலகட்டத்தில் இத்தகைய விஷயங்களை பொருள் புரியும்படி  வாசிக்க பழகியிருக்கவில்லை).
                      கல்லூரி ஒரு திருப்புமுனையை என் வாசிப்புப் பழக்கத்தில் ஏற்படுத்தியது. பள்ளி வயது அறிமுகப்படுத்திய ரெண்டாந்தர  புத்தகங்களின் உயர் வடிவம் கல்லூரியிலும் கிடைத்தது. கூடவே, நண்பர்களின் அறிமுகத்தில், கவிதை புத்தகங்களும், புதிய நாவல் ஆசிரியர்களும் கிடைத்தனர். வைரமுத்து கவிதை புத்தகங்களை வாசித்து பிடித்த வரியை அடிக்கோடிட்டு பிடித்தவர்களுக்கு கொடுத்த காலம் அது. பாலகுமாரன் நாவல்கள் வாசிக்கிறேன் என்று கர்வமாக அலைந்த காலம் அது. தோழர்கள், ரமணன், ஜான், லீனா மணிமேகலை எனக்கு அறிமுகப்படுத்திய  புத்தகங்களும், அவர்கள் மற்றும் பிற நண்பர்களுடனான  பேச்சுகளும் தான், இன்று நான். ஜான், ரமணன், பிரான்சிஸ் மூவரும் அளித்த எங்கள் திருமண பரிசுகளில் ஒன்றான விகடன் பிரசுரத்தின் "ரொமான்ஸ் ரகசியங்கள்" புத்தகம் இன்றும் எங்கள் வீட்டு புத்தகங்களோடு ரகசியம் பேசிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கும், ஜான் புதிய புத்தகங்கள் வாங்கும் போது,  தெரியப்படுத்துகிறான்..... நல்ல வாசிப்பாளன்.
                         கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்த பின்னர் அதுவரை அறிமுகமில்லாத  வேறு ஒரு இலக்கிய பாதையை நண்பர்கள் அறிமுகப் படுத்தினர். பேராசிரிய நண்பர்கள் சுப்பையா பாரதி மற்றும் பிரகாஷ் நினைவுகூரத் தக்கவர்கள். சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை" யை பிரகாஷ் வாசிக்கத் தந்தார். தி.ஜா.  வின் "மோகமுள்" ளை பாரதி, சுருங்க சொல்லி விளங்க வைத்து, வாசிக்க வைத்தார்.  காலச்சுவடு அறிமுகமானது..... தாமரை யும்  தெரிந்தது..... அனந்த விகடனும் தொடர்ந்தது. "மிர்தாதின் புத்தகம்", மும், திருக்குரானும் பின்னாட்களில் அண்ணன் அபுதாஹிரின் அறிமுகங்கள். அடடே தருணங்களையும், ஆச்சரிய அறிமுகங்களையும் புத்தகங்கள் சில நேரம் நமக்குத் தரும்...... சுரேஷ் அறிமுகப் படுத்திய தஞ்சை ப்ரகாஷ் அப்படி ஒன்றுதான். சுரேஷை அப்படி நான் பழகியது இல்லை. அவர் தந்த "மீனின் சிறகுகள்" நிச்சயமாக எனக்குப் புது அனுபவம் தான்.
                         சங்கீதாவின் கவிதை ஆர்வம், இயல்பாகவே புத்தகங்கள் வாங்குவதற்கு மாத பட்ஜெட்டில் தனியே பணம் ஒதுக்க வழிவகை செய்த்து. மனைவியும் வாசிப்புப் பழக்கம் உடையவராக இருப்பது, ஆனந்தம் தான். திருமணமான புதிதில், இருவரும் இணைந்தே கவிதைகளும், கட்டுரைகளும், கதைகளும் வாசித்திருக்கின்றோம்.  வாசித்து சுவாசித்திருந்திருக்கின்றோம். இணையோடு இணைந்து வாசித்துப் பாருங்கள்.... அது ஒரு சுகானுபவம். எங்கள் மகனுக்கும் (முகிலன்) மகளுக்கும் (செந்திரு) வாசிக்கும் பழக்கத்தைத் தந்திருக்கிறோம்.  நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளை நாங்கள் முடிந்த வரை குடும்பமாகவே சென்று பார்த்து வருகின்றோம்.
                          என் மாமனார், கவிஞர். சாகோவி (சா.கோவில்பிள்ளை, விளாத்திகுளம்) ஒரு மிகச் சிறந்த தீவிர வாசிப்பாளர். பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிச சித்தாந்ந்தங்களிலும், வள்ளுவ நெறிகளிலும் அதி தீவிர ஈடுபாடுகொண்டு இன்றளவும் முறையான கட்டமைக்கப் பட்ட வாசிப்புப் பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டிருப்பவர். மிக அதிகமான நூல்களை, அவரின் நூலகத்தின் வழி, எனக்குள் கடத்தியதில் அவரின் பங்கு அளப்பரியது.  அவரின் இல்லத்தில் நிகழும் எங்களின் ஒவ்வொரு சந்திப்பும், ஆரோக்கியமான விவாதங்களாகவும், கருத்து மோதல்களாகவும், சிந்தனை அறிதல்களாகவுமே இப்போதும் இருந்துகொண்டிருக்கிறன. இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் வாசிப்பை விரிவுபடுத்தி, இலக்கிய கூட்டங்களில் கவிதைகளாகவும், உரைகளாகவும் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு ஆதரவாகவும், தீண்டாமைக்கு எதிராகவும் வாள் வீசிக் கொண்டிருப்பவர். எங்கள்  திருமணம் தந்த இந்த உறவு, எனக்குப் பல தள  புத்தகங்களை அறிமுகப் படுத்தியது.
                           சென்னை IIT சூழல் வேறு ஒரு தளத்தை என் புத்தக வாசிப்பிற்கு ஏற்படுத்தித் தந்தது. கைலாசநாதனின் நட்பு, மாற்று சிந்தனைகளையும் புத்தகங்களையும்  அள்ளித் தந்தது. இன்றும் எங்கள் இருவரின் நேர் பேச்சோ, அலை பேச்சோ புத்தகங்களைப் பேசாமல் முடிந்ததில்லை. பொன்னியின் செல்வன் நாவலின் கடைசி தொகுதியை ஓர் இரவில் வாசித்து முடித்தேன்.
                           என் இதுவரையிலான வாழ்வில், புத்தகங்கள் பல ஆச்சரியங்களைத் தந்துள்ளன. பல புதிய அறிமுகங்களைத் தந்துள்ளன. பலர் அறிமுகப் படுத்திய புத்தகங்களை வாசித்துள்ளேன். அறிமுகமான சிலருக்காகவும் நான் புத்தகங்கள் வாசித்துள்ளேன். எனக்கு அறிமுகமான புத்தகங்களை பலருக்கு நான் அறிமுகப் படுத்தியுள்ளேன்.... குறிப்பாக என் மாணவ நண்பர்கள் பலருக்கு (பிரவின்  குமார், சினேகா, ரெங்க ராஜன், கொடிமலர், சரஸ்வதி, லட்சுமி பிரியா, அபியா....). அவர்களுக்காக நான் புத்தகம் வாசித்துள்ளேன். சினேகா விற்காக வாசித்து பேசியதும், காந்தி கருணா, பிரவின் குமார் மற்றும் என் மருமகன் சுந்தர மகாலிங்கம் உடனான புத்தக உரையாடல்களும் எப்போதும் சிறப்பானவைகளாகவே இருந்திருக்கின்றன.
                          இப்புத்தக வாசிப்புப் பழக்கம், பரிசுகளைப் புத்தகங்களாகவே என்னைத் தர வைத்துள்ளது. எங்கள் புது வீடு புகு விழாவிற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு புத்தகங்களைப் பரிசளித்து மகிழச் செய்தது.
                       இப்பொழுதெல்லாம், நான் சந்திக்கும் இளம் தலைமுறைகளிடம் தவறாது வாசிக்க சொல்லுகிறேன்...... எதையாவது வாசிக்க சொல்லுகிறேன்.... நானும் வாசிப்பை முறை படுத்த முயற்சித்துக் கொண்டேதானிருக்கிறேன்.... ஆமாம்..... என் சிறு வயதில் ஆரம்பித்த முறைப்படுத்தப் படாத வாசிப்பு, மேல் பத்திகளில் குறிப்பிட்ட  மற்றும் என் நினைவில் இல்லாத இவ்வளவு பெரிய வாசிப்பாளர்களையும், அறிஞர்களையும் கடந்த பின்னரும் இன்னும் முறைப்படவில்லை. நான் வாசிக்க எடுத்தப் புத்தகங்கள் பல இன்னும் முடிக்கப் படாமலே மூடிவைக்கப் பட்டிருக்கின்றன. அஞ்ஞாடியும், காவல் கோட்டமும், கல்குதிரையும், மிர்தாதின் புத்தகமும் இன்னமும் அப்படியே என் வாசிப்புப் பாதையில் பாதியிலேயே நிற்கின்றன.
                        நான், வாசிப்பை இன்னும் முறை படுத்த வேண்டும்.... வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்த வேண்டும்..... ... வாசிப்பின் ஆழத்தை அதிகப் படுத்த வேண்டும்..... வாசித்துப் பேச வேண்டும்...... சுவாசம் இருக்கும் வரை வாசிக்க வேண்டும்......
                      தலைப்புகளைப் பகிர்வோம்...... வாசிப்புப் பழக்கத்தை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவோம்...... பண்படுவோம்.
                      உலக புத்தக தின வாழ்த்துகள் !!!