கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜூலை 2011

நான் ஆண்!

நான் ஆண்!

அகங்காரத்தின் ஆட்சியில்

ஆணவத்தோடு அலைந்து கொண்டிருக்கும்

திமிர் பிடித்த

சதைத் திரட்சி நான்.

வெளி மைதானத்தில்

நான்

வீறுகொண்டு எழுவதாய்

உனக்குப் புலப்படலாம்.

வெற்றி

எப்பொழுதும் எனதாக

வெறிகொண்டலையும் வேங்கையாக

நான்

உனக்குத் தெரியலாம்.

உன் உணர்ச்சிகளைத்

தூண்டிவிடும்

உல்லாச குருவியாக

என்னை

நீ உணரலாம்.

உன் உரிமைகளை

உருத்தெரியாமல் அழித்தொழிக்கும்

விசத் திராவகமாக

நான்

உனக்கு உணரப்படலாம்.

உன் சுயமரியாதையை

சுக்கு நூறாக

உடைத்தெறியும் சுத்தியாக

நான்

உன்னைப் பயமுறுத்தலாம்.

உன் கண்ணாடிக்

கனவுக் கோட்டையில்

கல்லெறியும் கயவனாகவும்

நான்

அறியப்படலாம்.

உன் மேல்

என் கண்களை மேயவிட்டு

உன்னை ருசிக்கத் துடிக்கும்

குள்ள நரியாக

நான்

உனக்குத் தெரியலாம்.

ஆனால்...

நான் ஆண்.

பெண்மையை உள் புதைத்து

ஆண்மையை வெளி நீட்டி

கால் பரப்பி கை வீசி

வீதிகளில் அலையும்

வெற்றுடம்பு

ஆண் நான்.

17 மே 2011

நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு

நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு
நடுவே கனமானக் கயிறு
அந்தப் பக்கம் நீ
இந்தப் பக்கம் அவன்.
கயிறு மட்டத்திற்கு மேல்
ஒரு ஓரத்தில்
உங்களிருவரையும்
பார்க்கும் விதத்தில்
நடுவராகவும் பார்வையாளனாகவும்
நான்.
நீங்களிருவரும் அவ்வப்போது
ஒவ்வொருமாதிரி மாறிக் கொள்கிறீர்கள்
ஆனால்
எப்பொழுதும் அந்தக் கயிறு மட்டும்
உங்கள் நடுவே.
சில நேரம் நீங்களிருவரும்
கையிறை விட்டு விலகி
தனித் தனியே தூரமாய்
சென்றுவிடுகிறீர்கள்.
சில நேரம் நெருங்கி வருகிறீர்கள்.
புன்னகைகிரீர்கள்
சத்தமாய் சிரிக்கிறீர்கள்.
கனமான அந்தக் கயிறு
மெல்லிய நூலாகிறது.
இச் சந்தர்பத்தை
நீங்களிருவரும் மிகச் சரியாக
பயன்படுத்துகிறீர்கள்
தொட்டுக் கொள்கிறீர்கள்
தடவிக் கொள்கிறீர்கள்
மெய் மறக்கிறீர்கள்
திடீரென்று
ஏதோவொன்று உங்களைக்
கலவரப் படுத்துகிறது.
இருவரும்
முறைத்துக் கொள்கிறீர்கள்
உங்கள் பார்வை
பயமுறுத்துகிறது
கோபத்தோடு முனங்கத் தொடங்குகிறீர்கள்.
ஒருவரை ஒருவர் திட்டிக்கொல்கிரீர்கள்.
முகத்துக்கு நேரே விரல் நீட்டி
வெறுப்பை வார்த்தைகளாய்
கொட்டி தீர்க்கிறீர்கள்.
உங்கள் இருவர் மீதான
கோபம் ஒருவருக்கொருவர்
அதிகரிக்க அதிகரிக்க
கயிறு கல்லாய் மாறுகிறது.
கல் பாரையாகிறது
பெரிய கல் திரை
இப்போது உங்கள் நடுவில்.
இருவரும் ஒருவாறாய்
இருவரிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிரீர்கள்.
மீண்டும் தூரமாய் செல்கிறீர்கள்.
நான்
பார்த்து ரசிக்கிறேன்.
நடுவராய் சிந்திக்கிறேன்.
கல்திரை உங்களிருவரையும்
காத்து விட்டது.
நேரம் கடந்து செல்கிறது.
நெருங்குகிறீர்கள்
கல் திரையைத் தட்டுகிறீர்கள்.
இருபுறமும்
கல் திரை கரைகிறது.
கல் கரைந்து
திரையாகிறது.
அந்தக் கயிற்றைப்
போல் திரை
ஒருவரைஒருவர்
தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை.
நீங்கள் நிழல்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள்.
உன் மனதின் ஈரம்
கண்களிலும்.
அவன் மனதி பாசம்
கண்களிலும்.
திரையின் உயரம்
குறைகிறது.
திரை கயிராகிறது.
புன்னகைக்கிறீர்கள்
சத்தமாய் சிரிக்கிறீர்கள்.
நீங்களிருவரும் அவ்வப்போது
ஒவ்வொரு மாதிரி மாறிக் கொள்கிறீர்கள்.
ஆனால் எப்போதும்
கயிறு மட்டும் உங்கள் நடுவே.
சில நேரம் கயிறாய்
சில நேரம் மெல்லிய நூலை
சில நேரம் கல்லாய், கல் திரையை
சில நேரம் திரையாய்.
நான்
நீங்கள் புன்னகைக்கும் போது
பார்க்கிறேன்
சத்தமாய் சிரிக்கும் போது
கவனமாய் புன்னகைக்கிறேன்.
இருவரின்
கோபப் பார்வைகள் சந்திக்கும் போது
சற்றே நிதானிக்கிறேன்.
வெறுப்பு
வார்த்தைகளாகும் போது
பயத்துடன் குழம்பிப் போகிறேன்.
இருவரின்
அனைத்து அசைவுகளுக்கும்
நானும் அசைகிரேன்.
உன் அமைதி
அவனை சில நேரம்
அழுது புரண்டு ஆர்ப்பாட்டம்
செய்ய வைக்கிறது.
அப்படியே அவனுடையது
உன்னையும்.
புன்னகைக்கிறீர்கள்
சிரிக்கிறீர்கள்
அழுதுவிடுகிரீர்கள்
கோபப் பார்வை
பார்த்துக் கொள்கிறீர்கள்.
திட்டிக் கொள்கிறீர்கள்
தூரப் போகிறீர்கள்
திரும்ப வருகிறீர்கள்.
எது எப்படி நிகழ்ந்தாலும்,
நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு.



29 ஏப்ரல் 2011

சுதந்திர அடிமைகள்!

சுதந்திர அடிமைகள்!
அடிமைகள்.
நாங்கள் அடிமைகள்!
அச்சுறுத்தும் ஆழிப்பேரலைகள்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
மகா சமுத்திரத்தின்
நடுவில் இருக்கும்
கரடு முரடான
மலையின் உச்சியில்
தங்கக் கூண்டில்
நாங்கள் சுதந்திரமாய்
உலாவிக் கொண்டிருக்கிறோம்.
எங்கள்
கரங்களும் கால்களும்
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
திறந்து விடப்பட்டிருக்கும்
எங்கள் கூண்டின்
கதவுகளில்
கட்டுவிரியன் பாம்புகளும்
கூறியப் பற்களோடு ஓநாய்களும்
காவலுக்கு நிற்கின்றன.
நாங்கள் அடிமைகள்.
சுதந்திரமாய் சுற்றித் திரிய
அனுமதிக்கப் பட்டிருக்கும்
சிறந்த அடிமைகள்.

01 மார்ச் 2011

குட்டையில்...

குட்டையில்...
குட்டக் குட்டக்
குனிந்து கொண்டிருந்தான் சிறுவன்.
குட்டையில் கல்லெறிந்தான்.
கலங்கித்தான் போனது...!!!?

அறுத்து எறிந்தோம்....

அறுத்து எறிந்தோம்....

தாகம் ஆகி...

தண்ணீர் தேடி...

இனி என்ன?

சாகத்தான் வேண்டும்.

சங்கடங்கள்தான் மிஞ்சும்.

அனைத்தும் அறிந்துதானே

அறுத்து எறிந்தோம்.

08 பிப்ரவரி 2011

அம்மா!

அம்மா!
நான் உயிர் வாழ
தன் உதிரம் கொடுத்தவள்.
என்னை உதிர்க்காமல்
உலகம் காணச் செய்தவள்.
பல இரவுகள் எனக்காக
உறக்கம் உதிர்த்தவள்.
உணவை தன் குருதி
தந்தவள்.
என் தந்தையை எனக்கு
அறிமுகம் செய்தவள்.
என் அழுகையின்
பொருளை உணர்ந்தவள்.
என் சிரிப்பில்
சிலாகித்தவள்
தன் மடியை
எனக்கு மெத்தை ஆக்கியவள்.
எனக்கு இயற்கையை
அறிமுகம் செய்தவள்.
இயற்கையோடு என்னை
ஒப்பீடு செய்தவள்.
வெண் மதியை
எனக்காய்
பூக்காரி ஆக்கியவள்.
என் வெள்ளை சிரிப்பில்
தன் உள்ளம் குளிர்ந்தவள்.
என் வளர்ச்சியை
ஆவலாய் உற்று நோக்கியவள்.
என் பாதையை
செம்மையாக்கியவள்.
என் நோயில்
அவள் உடல் சிறுத்தவள்.
உள்ளம் அழுதவள்.
எனக்காய் அனைத்தையும்
இழந்தவள்.
அம்மா!

23 ஜனவரி 2011

நிஜம்

இது கலசலிங்கம் கல்லூரியில் படித்துகொண்டிருக்கும் போது வகுப்பறையில் அமர்ந்து எழுதியது (இதில் முதலில் வருவது என் வார்த்தைகளின் தொகுப்பு. அடுத்து வருவது ரமணனின் வார்த்தைகள். கடைசியில் வருவது மீண்டும் நான் கூறியது) :

காதலைத் தேடி

அலைந்தேன்.

கண்டேன்.

கன்னியவள் மனதில்

கைதியாக.

காதல் காலியாக

நான்

சிறை மீட்க.

கன்னியின்

நீதிமன்றத்தில் வழக்கு.

வாய்தாக்களில் வாழ்க்கை

முடிந்துவிடுமோ...?

நல்லா வேலை

கஜினியின் என்னில்

காதலுக்கு விடுதலை.

இருவரும் கலந்தோம்.

காதலில் கரைந்தோம்.

இப்பொழுது நாங்களில்லை.

எங்கள்

காதல் மட்டும்

சரித்திரப் புத்தகத்தில்.

- சங்கரின் பேனா மூலம் வரல்லாற்றுக் காதலர்கள்-

கனவுகளுக்கு கடிவாளமிட்டு

நிஜங்களில் நீந்தக் கற்றுக்கொள்.

- ரமணன்-

என் கனவில் மட்டுமே

என் காதலி என் முன்.

பின் எப்படி

கனவுகளுக்குக் கடிவாளம்...?

- சங்கர்-

நல்லது நடக்கட்டும்.

ஆசிரியர் மகிழ்ச்சி கழகத்தின் புத்தாண்டு கூட்டத்தில் நான் வாசித்த கவிதை. (2002/2003) :
நல்லது நடக்கட்டும்.
சிந்தை கேட்ட சிலதுகள்
சிதிலமடையட்டும்.
முன்னெது பின்னெது
என அறியாமல்
ஆர்ப்பரிக்கும் அறிவிலிகள்
அழியட்டும்.
குறை கூறி
குறுகிப் போன நாவு
எப்பொழுதாவது வாழ்த்துகள்
கூறி நீலமாகட்டும்.
வாழ்த்துகளுக்காக
வாசற்கதவைத் திறக்கும் செவிகள்
குறை கேட்க
சன்னல்களையாவது திறக்கட்டும்.
புகழுக்காய் ஏங்கும் மனம்
சிலகாலம்
புத்திக்காய் ஏன்கட்டும்.
மந்த புத்தியுள்ள மானுடம்
முதலில்
தன்னை அறியட்டும்
அடுத்தவனை பிறகு
ஆராயட்டும்.
அசிங்கம் அமுங்கி அழியட்டும்.
அழகு பொங்கி வழியட்டும்.

உன்னால்...

உன்னால்...
சிலரால்
சிலரது சிலுவைகள்
சிறகுகளாகும்.
எனக்கு உன்னால்.

நீயும்தான்...

நீயும்தான்...

சிக்கல் நிறைந்த

சில சந்தர்ப்பங்கள்

என்னை

சிந்திக்கத் தூண்டும்.

சில சந்தர்ப்பங்களில்

நீயும்தான்.

வார்த்தைகள் வங்கிகளில்

இருவருக்கிடையிலான வாய் வார்த்தை சண்டையின் வெளிப்பாடு :

வார்த்தைகள் வங்கிகளில்

தெரிந்துகொள்

என் சிநேகிதியே!

உன்

வார்த்தைகள்

வங்கிகளில் சேமிக்கப்படுகின்றன.

வட்டியும்

முதலுமாய்த்

திருப்பியளிக்கப்படும்.

ம (களிர்) றுப்பு தினம்.

2000 மாவது வருடங்களின் தொடக்கத்தில் வந்த ஒரு மகளிர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது.

ம (களிர்) றுப்பு தினம்.

கருவறையில்

உன் துள்ளலும் துடிப்பும்

உன் தாயின்

கட்டளைபடியா...?

கருவறைக்கும்

உனக்கிருந்த

உன் இயல்பு

இன்று

உன்னிடத்தில் வெற்றிடமே!

ஜீன்சும் டீசர்டும்

சுடிதாரும் குட்டைபாவாடையும்

உன் உரிமைகளை

பறைசாற்றப் போவதில்லை.

உன் கோட்டைக்குள்ளேயே

உன் கொடி

அரைக் கம்பத்தில்தான் பறக்கிறது.

குற்றவாளிகளுக்கு

ஒரு நாள் தண்டனை

ஒரு நாள் விடுதலை.

நீ

தினமும் காலையில்

விடுதலையாகி

மாலையில் சிறைபடுகிறாய்.

எந்தக் கிளி

கூண்டை நாடும்...?

நீ நாடுகிறாய்....?

சுதந்திரப் பறவை

சிரகருபட தலைப்படுமோ...?

உன் உரிமைகளை

தினமும்

கசாப்புக் கடையின்

கத்திகள் கற்பழிக்கும்.

நீயோ

உரிமைகளை இழந்து

உயிரற்ற பிண்டமாய்

வர்டமொருமுறை

ஆனந்தக் கூத்தாடுவாய்.

உந்தன் உரிமைகளுக்கு

கருவறையே

கல்லறையானதோ...?

வார்த்தை கவிதை

இதழ்

முத்தம்

சங்கமம்

இரத்தம்

ஜனனம்

சொந்தம்

மொத்தம்

இல்லை

பித்தம்

குத்தம்

வருத்தம்

நித்தம்

அனைத்தும்

சுத்தம்.

19 ஜனவரி 2011

இதயத்தை இடம் மாற்றுவாயா...?

கவனிப்பாரற்று கிடந்த
என் இதயம்
சட்டென்று ஒரு நாள்
சற்றும் யோசியாமல்
சரேலென்று வெளியேறியது.
இடப்பாக வெற்றிடத்துடன்
இதயம் தேடி அலைந்தேன்.
என் இதயத்தின்
இருப்பிடம் பற்றி
இம்மியளவும் தகவலில்லை.
இதயம் மறந்து
இலக்கியம் தேடி புறப்பட்டேன்.
இலக்கியம் கண்டேன்.
கவனிப்பாரற்று கிடந்த
என்னிதயம்
இலக்கியத்தில்
இறுமாப்பாய் அமர்ந்திருக்கிறது.
என்
இதயத்தை
எனக்கு
இடம் மாற்றுவாயா...?
ப்ளீஸ்...?