01 ஜூலை 2011

நான் ஆண்!

நான் ஆண்!

அகங்காரத்தின் ஆட்சியில்

ஆணவத்தோடு அலைந்து கொண்டிருக்கும்

திமிர் பிடித்த

சதைத் திரட்சி நான்.

வெளி மைதானத்தில்

நான்

வீறுகொண்டு எழுவதாய்

உனக்குப் புலப்படலாம்.

வெற்றி

எப்பொழுதும் எனதாக

வெறிகொண்டலையும் வேங்கையாக

நான்

உனக்குத் தெரியலாம்.

உன் உணர்ச்சிகளைத்

தூண்டிவிடும்

உல்லாச குருவியாக

என்னை

நீ உணரலாம்.

உன் உரிமைகளை

உருத்தெரியாமல் அழித்தொழிக்கும்

விசத் திராவகமாக

நான்

உனக்கு உணரப்படலாம்.

உன் சுயமரியாதையை

சுக்கு நூறாக

உடைத்தெறியும் சுத்தியாக

நான்

உன்னைப் பயமுறுத்தலாம்.

உன் கண்ணாடிக்

கனவுக் கோட்டையில்

கல்லெறியும் கயவனாகவும்

நான்

அறியப்படலாம்.

உன் மேல்

என் கண்களை மேயவிட்டு

உன்னை ருசிக்கத் துடிக்கும்

குள்ள நரியாக

நான்

உனக்குத் தெரியலாம்.

ஆனால்...

நான் ஆண்.

பெண்மையை உள் புதைத்து

ஆண்மையை வெளி நீட்டி

கால் பரப்பி கை வீசி

வீதிகளில் அலையும்

வெற்றுடம்பு

ஆண் நான்.

கருத்துகள் இல்லை: