வணக்கம்!
நான் அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில (அதாங்க, AKCE ல) உங்களோட படிச்ச ஒருத்தன் (ஒருத்தி னு கூட வச்சுக்கோங்க) பேசுறேன்.
அது அநேகமா, 1994 வது வருசத்துல, செப்டம்பர் இல்லனா அக்டோபர் மாசமா இருக்கும்னு நெனைக்கிறேன். நாம எல்லாரும் வேற வேற ஊர்கள்ல இருந்து வேற வேற கனவுகளோடு இன்ஜினியர் ஆகிருவோம்ங்கிற நம்பிக்கையோட, படங்கள்ல பாத்த மாதிரிதான் காலேஜ் இருக்குங்கிற குதூகலத்தோட நம்ம காலேஜ்ல அடியெடுத்து வச்சோம். மொத நாள் ரொம்ப பேரு அவிங்க அவிங்க அப்பா அம்மா மாமா னு பல ஒறவுகளோட வந்திருந்தோம். கொஞ்ச பேரு அவிங்களாவே பெட்டிய தூக்கிட்டு வந்திருந்தோம். ஹாஸ்டல்ல விட்டுட்டு போயிட்டாய்ங்க. போகும் போது, சூதானமா இரு(மா)டா .... சாமானெல்லாம் உள்ள வச்சு பூட்டிக்கோ.... கூட இருக்குறவய்ங்க யாரு என்னன்னு தெரியாது... எடுத்தாலும் எடுத்துருவாய்ங்க.... பத்திரமா வெச்சுக்கோன்னு, சில பல அறிவுரைகள அள்ளித் தெளிச்சுட்டு போனாய்ங்க.
அடுத்த நாளு, கிளாஸ் ஆரம்பிச்சாய்ங்க. அங்க புதுசா கொஞ்ச பெரு டேஸ்காலர் னு சொல்லி அறிமுகமானாய்ங்க. கோஎட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்தவய்ங்க ஒருபக்கம் டீசெண்டா சைட் அடிச்சா.... இன்னொரு பக்கம் பசங்க பொண்ணுங்கன்னு தனித்தனியா படிச்ச ஸ்கூல்ல இருந்து வந்தவய்ங்க வெக்கப்பட்டும், கூச்சப்பட்டும் வெறிச்சுப்பாத்தும் சைட் அடிச்சுக்கிட்டாய்ங்க.
மொத வருசம் நமக்குத்தான் டிபார்ட்மென்ட் பிரிக்கலல... செக்சன் செக்சனா தான பிரிச்சிருந்தாய்ங்க. சீனியர்ஸும் அப்பப்போ நம்மள ராகிங் செஞ்சு பிரி பிரி னு பிரிச்சாய்ங்க. அப்புறமா நாம கோபப்பட்டு, அவிங்க ஆத்திரப்பட்டு, நம்மள ஹாஸ்டலுக்குள்ள புகுந்து அடிக்க வந்து, நாம அடி வாங்கி, அவிங்கள நாம அடிச்சு, காலேஜ் ஐ.டி.சி. விட்டு கொஞ்ச நாளைக்கப்புறம் திரும்பவும் காலேஜுக்கு வந்தோம்.
மொத வருசமே நமக்கு சயின்ஸ் எக்சிபிசன் நடந்துச்சு..... ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா? கொஞ்ச பேரு கலந்துக்கிட்டோம், ரொம்பப்பேரு பாத்தோம்..... எல்லாத்தையுந்தான். அப்புறமென்ன, அப்டியே ஃபர்ஸ்ட் இயர் முடிஞ்சுச்சு. ரிசல்ட் வந்துச்சு. ஃபர்ஸ்ட் மார்க் செகண்ட் மார்க்ல இருந்து, ஒரு அரியர் வாஷ் அவுட் வரைக்கும் சோகமும் சந்தோஷமும் கலந்து கட்டி, டிபார்ட்மென்ட் பிரிஞ்சு (சிலருக்குப் பிடிச்சும் சிலருக்குக் கெடச்சும்) ரெண்டாவது வருசத்துக்குள்ள போனோம்.பர்ஸ்ட் இயர்ல வேற செக்சன்ல இருந்த நம்ம ஆளு நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கே வந்த சந்தோஷத்தோடயும், நம்ம ஆளு வேற டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருச்சேங்கற வருத்தத்தோடயும் இருக்கும்போதே, டிபார்ட்மெண்ட் ரெப்பு, செகரட்டரி எலெக்சன்... க்ளாசுக்குள்ள குரூப்பு, அதுக்கான பிரச்சாரம், ட்ரீட்டு (அதுவுந்தான், எல்லாந்தான்) ரிசல்ட்டு, அதுக்கப்புறம் ஒரு வார டூரு. தோத்த குரூப்பு டூருக்கு வரமாட்டேன்னு வீம்பு காட்டுறது.... எறங்கி போயி கூப்புட்றோம்ங்கிறத வெளிய காமிச்சுக்காம அவிங்களையும் டூருக்கு வர வைக்கறது. இப்டிலாம் டூருக்கு ரெடி பண்ணுனா... கடைசி நேரத்துல பஸ்சு வரல்லன்னு சொல்லி டூர் கேன்சலாகி மறுவாரம் டூருக்குப் போனோம். அந்த ஒரு வாரத்துல காதல் மலர்ந்து, நட்பு பெருகி, பாசம் படர்ந்து திரும்பவும் காலேஜ் வந்து சேந்தோம் .
ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா... நம்ம காலேஜ்ல, பொண்ணுங்களாம் அப்போ சேல தான் கட்டிட்டு வரணும். இந்த விசயத்த நம்ம செட்டுப் பொண்ணுங்கதான் முன்ன நின்னு பேசி பொண்ணுங்க சுடிதாரும் போட்டுட்டு வரலாம்னு பெர்மிசன் வாங்குனாங்க. சந்தோசந்தானாலும், பசங்களுக்கு கொஞ்சம் வருத்தந்தான் .
அப்டியே நாளும் நகந்துச்சு. நமக்குள்ள கொஞ்ச பேரு ரொம்ப பயங்கரமா படிச்சாய்ங்க... கொஞ்ச பேரு பயங்கர மோசமா படிச்ச்சாய்ங்க. ஆனா எல்லாரும் சேந்தே இருந்தாய்ங்க. நோட்ஸ் ஷேர் பண்ணிக்கிட்டாய்ங்க... குரூப் ஸ்டடி பண்ணாய்ங்க.... தெரிஞ்சவிங்க தெரியாதவைங்ககளுக்கு சொல்லி குடுத்து பாஸ் பண்ண வச்சாய்ங்க. முடியலைன்னா அப்டியே விட்டாய்ங்க. பிட்டு அடிச்சி மாட்னாவைங்க ஒரு பக்கம் இருந்தா, இன்னொரு பக்கம் பிட்டு அடிச்சு பாஸ் பண்ணவைங்களும் இருந்தாய்ங்க. இதெல்லாம் எதுக்குடா வம்பு னு ஸ்கூட் அடிச்ச கோஷ்டியும் இருந்துச்சுல.
சேந்து இருந்த எல்லாருமே குரூப் குரூப்பா இருந்தாய்ங்க. நெறையா பேரு ரெண்டு குரூப்ல ஏதாவது ஒன்னுல இருப்பாய்ங்க, கொஞ்ச பேரு ரெண்டுக்கும் நடுவுல இருப்பாய்ங்க. இன்னும் கொஞ்ச பேரு இருந்தாய்ங்க.... அவிங்க இது எதுலயுமே இல்லாம தனியா ஒரு குரூப்பா சுத்துனாய்ங்க.
டிபாட்மென்ட் சிம்போசியம்... அதுல நடக்குற கல்ச்சுரல்ஸ், நம்ம காலேஜ் கல்ச்சுரல்ஸ் (சைனோசர்.... ஞாபகம் இருக்கா), வெளி காலேஜ்கள்ல நடக்குற கல்ச்சுரல்ஸ். இதுலெல்லாம் கலந்துக்கிட்டது... பரிசு வாங்குனது, தோத்தது. சீனியர்ஸும் நம்ம நட்பு வட்டத்துக்குள்ள வந்ததது... அவிங்க மூலமா பாடத்துல இருந்து பரீட்சை வரை எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டது. நாம, அவிங்களப் பாத்து "ஏங்க... சூப்பருங்க" ன்னு ஆச்சர்யப்பட்டது... நம்மள பாத்து அவிங்க " டேய்... எப்புட்றா" ன்னு கேட்டது வரைக்கும் நடந்துச்சு. சீனியர்ஸ்ல சில பேரோட, நாம வா(டி)டா போ(டி)டா ங்கற அளவுக்கு நட்பு பலமாச்சு. நம்ம ஜுனியர்ஸும் நம்மளோட அப்டி பழகுற மாதிரி நாமளும் நடந்துக்கிட்டோம். இன்னமும் நம்ம சீனியர்சோடயும் ஜுனியர்சோடயும் நம்ம நட்பு அப்டியே தொடர்றதுக்கு வெத அங்க விழுந்துருக்கு.
TIES (தமிழ்நாடு இன்டெர் இன்ஜினியரிங் ஸ்போர்ட்ஸ்), இன்டெர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் ன்னு, படிப்போடு சேந்து எல்லாத்துலயும் எல்லா லெவல்லயும் அனுபவிச்சோம். ஃப்ரென்ட்ஸ் வீட்டுக்கெல்லாம் போனோம், நம்ம வீட்டுக்கு ஃப்ரென்ட்ஸ் வந்தாங்க. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி இருந்துச்சு. விதவிதமான அனுபவங்கள். ஃப்ரென்டு, வீட்டுல இல்லனாலும் அவிங்க வீட்டுக்கு நாம போயி சாப்ட்டு வர்ற அளவுக்கு நெருக்கம் அதிகமாச்சு.
மூணாவது வருசத்துல 15 நாள் டூரு. நாலாவது வருசத்துல ஒரு மாச ஆல் இந்தியா டூரு ன்னு, அது ஒரு அனுபவம். அதயெல்லாம் ஒரு வாழ்க்கை அனுபவம்னே சொல்லலாம். அங்க நம்ம காலேஜ்ல நமக்கு என்ன தான் கிடைக்கல? நட்புல இருந்து காதல் வரைக்கும், சந்தோஷத்துல இருந்து சோகம் வரைக்கும், மோகத்துல இருந்து காமம் வரைக்கும், நல்லதுல இருந்து கெட்டது வரைக்கும் எல்லாந்தான் கெடச்சது.
எத்தன பேரு சைட் அடிச்சுக்கிட்டே இருந்து சொல்லாமலேயே கெளம்பி போயிட்டாய்ங்க. எத்தன பெரு தைரியமா சொல்லி கல்யாணம் வரைக்கும் போனாய்ங்க. மின்சாரக் கனவு கதைலருந்து, காதல் தேசம் கதை வரைக்கும் எத்தன கதைகள நம்ம காலேஜ்ல பாத்துருப்போம். ரீல் லைஃப் அண்ணன் தங்கச்சிகளையும் மிஞ்சுற ரியல் லைஃப் அண்ணன் தங்கச்சிகளையும் நாம காலேஜ்ல பாத்துருக்கோம்ல.
கோனார் கேண்டின், கதிரவன் ஹோட்டல் கேண்டீன், அங்க சிதம்பரம் அண்ணன், கிருஷ்ணன் கோயில், பயில்வான் தியேட்டர் (நைட் 8 மணி ஷோ), பயில்வான் ஹோட்டல், மல்லி ரோடு ஒயிட் ஹவுசு, பட்டியக்கல், காலைல 4 மணிக்கு மொத பஸ்ஸ பிடிச்சு கள்ளு குடிக்க போறது, ஸ்ரீவில்லிபுத்தூர், பால்கோவா, செல்வி புரோட்டா கடை, ஆண்டாள் கோயில், ராஜபாளையம், ஆனந்தா தியேட்டர் புது படம், ஆனந்தா ஹோட்டல், மதுரைல இருந்து ஜெயவிலாஸ் பஸ்ல வர்றது, அப்பப்போ ஸ்ப்ளெண்டர், புல்லட், ஆர் எக்ஸ் 100 னு மோட்டார் பைக்ல வர்றது. வாரக் கடைசில ஊருக்கு போக காசு இல்லாம, பசங்க பசங்கி எல்லார்ட்டையும் இருக்குற காச வாங்கிட்டு ஊருக்கு போறது ன்னு எவ்ளோ பண்ணிருக்கோம். யோசிச்சு பாத்தா, ஆஹா னு இருக்குல்ல.
அந்த நாலு வருசத்துல எவ்ளோ பேர பாத்து ஆச்சர்யபட்ருப்போம், அவிங்களோட பேசணும்னு ஆசைப்பட்ருப்போம், எவ்ளோ பேர்ட்ட திட்டு வாங்கி அசிங்கப்பட்ருப்போம், நம்மகிட்ட பேச வந்த எவ்ளோ பேர தெரிஞ்சோ தெரியாமலோ உதாசீனப் படுத்திருப்போம், எவ்ளோ பேர கேலி பண்ணி சிரிச்சுருப்போம், எவ்ளோ பேர்ட்ட நாம அழுதிருப்போம், எவ்ளோ பேரு நம்மள்ட்ட அழுதிருப்பாய்ங்க, எவ்ளோ பேரோட துக்கத்துலயும் வலியிலயும் பங்கெடுத்துருப்போம்..... எல்லாந்தான் அந்த நாலு வருசமும் நடந்துச்சு.
எல்லாமும் சேந்துதான், 1994 ல ஆரம்பிச்ச அந்த நாலு வருஷம் 1998 ல முடிஞ்சது. பாடி திரிந்த பறவைகளோட, முஸ்தபா முஸ்தபா வையும் பாடி, ஃபேர்வெல் ஃபங்சன் ல கண்ணீரோட கலஞ்சு பிரிஞ்சு போனோம். இன்னமும் கொஞ்ச பேரோட அப்டியே தொடர்புல இருக்கோம். கொஞ்ச பேரு, என்ன ஆனாய்ங்கனே தெரில. கொஞ்ச பேரு இந்த ஒலகத்த்துலயே இல்ல.... நம்மள விட்டு போயே போயிட்டாய்ங்க. கொஞ்ச பேர இப்போ பாத்தா "ஏய்... நீயா... அடையாளமே தெரியல" ன்னு சொல்லுவோம்.
சொல்லுவோமா.....?
நாம காலேஜ் முடிச்ச இந்த 25 வது வருசத்துல திரும்பவும் பாப்போமா?
எல்லாரோடயும் திரும்பவும் பேசுவோமா?
இந்த சந்திப்பு புதுசா இருக்கும். அடையாளம் மாறிப்போன, வாழ்க்கைல வேற லெவலுக்குப் போன, வேற மாறி மெச்சூரிட்டி லெவல்ல இருக்குற நம்ம பிரெண்ட்ஸ பாத்து திரும்பவும் ஆச்சர்யப்படுறதா இருக்கும்.
அப்டிலாம் அவ(ள்)ன்ட்ட நான் நடந்திருக்க கூடாதுன்னு ஏதாவது நெனச்சுட்டு இருந்தோம்னா, அதயெல்லாம் பேசி சரி செஞ்சுறலாம். நமக்கு சொல்லிக்குடுத்த வாதியாருங்க யாருலாம் இப்போ இருக்காங்களோ அவுங்கள எல்லாம் சந்திப்போம் .
இந்த டிசம்பர் மாசம் 2023 ல ஒரு நாள், நாம நாலு வருசம் வாழ்ந்த நம்ம AKCE லயே நாமெல்லாம் திரும்பவும் சந்திப்போம். நெறய பேசுவோம்.
உங்களப் பத்துன விபரங்களயும், உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களயும் இந்த கூகுள் ஃபார்ம்ல ஃபில் பண்ணி அனுப்புங்க.
இந்த விசயத்த, உங்க தொடர்புல இருக்குற நம்ம பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் அனுப்புங்க. அவுங்களயும் ஃபில் பண்ணி அனுப்ப சொல்லுங்க.
வாங்க மீட் பண்ணுவோம். இந்தக் கடிதத்துல சொல்ல மறந்த பல கதைகள அங்க பேசுவோம். அடுத்த 25 வருசத்துக்கான மகிழ்வான நினைவுகளை அங்கயிருந்து எடுத்துட்டுப் போவோம்.
நன்றி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக