23 ஜனவரி 2011

வார்த்தைகள் வங்கிகளில்

இருவருக்கிடையிலான வாய் வார்த்தை சண்டையின் வெளிப்பாடு :

வார்த்தைகள் வங்கிகளில்

தெரிந்துகொள்

என் சிநேகிதியே!

உன்

வார்த்தைகள்

வங்கிகளில் சேமிக்கப்படுகின்றன.

வட்டியும்

முதலுமாய்த்

திருப்பியளிக்கப்படும்.

ம (களிர்) றுப்பு தினம்.

2000 மாவது வருடங்களின் தொடக்கத்தில் வந்த ஒரு மகளிர் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது.

ம (களிர்) றுப்பு தினம்.

கருவறையில்

உன் துள்ளலும் துடிப்பும்

உன் தாயின்

கட்டளைபடியா...?

கருவறைக்கும்

உனக்கிருந்த

உன் இயல்பு

இன்று

உன்னிடத்தில் வெற்றிடமே!

ஜீன்சும் டீசர்டும்

சுடிதாரும் குட்டைபாவாடையும்

உன் உரிமைகளை

பறைசாற்றப் போவதில்லை.

உன் கோட்டைக்குள்ளேயே

உன் கொடி

அரைக் கம்பத்தில்தான் பறக்கிறது.

குற்றவாளிகளுக்கு

ஒரு நாள் தண்டனை

ஒரு நாள் விடுதலை.

நீ

தினமும் காலையில்

விடுதலையாகி

மாலையில் சிறைபடுகிறாய்.

எந்தக் கிளி

கூண்டை நாடும்...?

நீ நாடுகிறாய்....?

சுதந்திரப் பறவை

சிரகருபட தலைப்படுமோ...?

உன் உரிமைகளை

தினமும்

கசாப்புக் கடையின்

கத்திகள் கற்பழிக்கும்.

நீயோ

உரிமைகளை இழந்து

உயிரற்ற பிண்டமாய்

வர்டமொருமுறை

ஆனந்தக் கூத்தாடுவாய்.

உந்தன் உரிமைகளுக்கு

கருவறையே

கல்லறையானதோ...?

வார்த்தை கவிதை

இதழ்

முத்தம்

சங்கமம்

இரத்தம்

ஜனனம்

சொந்தம்

மொத்தம்

இல்லை

பித்தம்

குத்தம்

வருத்தம்

நித்தம்

அனைத்தும்

சுத்தம்.

19 ஜனவரி 2011

இதயத்தை இடம் மாற்றுவாயா...?

கவனிப்பாரற்று கிடந்த
என் இதயம்
சட்டென்று ஒரு நாள்
சற்றும் யோசியாமல்
சரேலென்று வெளியேறியது.
இடப்பாக வெற்றிடத்துடன்
இதயம் தேடி அலைந்தேன்.
என் இதயத்தின்
இருப்பிடம் பற்றி
இம்மியளவும் தகவலில்லை.
இதயம் மறந்து
இலக்கியம் தேடி புறப்பட்டேன்.
இலக்கியம் கண்டேன்.
கவனிப்பாரற்று கிடந்த
என்னிதயம்
இலக்கியத்தில்
இறுமாப்பாய் அமர்ந்திருக்கிறது.
என்
இதயத்தை
எனக்கு
இடம் மாற்றுவாயா...?
ப்ளீஸ்...?

16 டிசம்பர் 2010

திரை அரங்கில் ஒரு நாள்.....

திரை அரங்கில் ஒரு நாள்.....
ரொம்ப நாளைக்கு அப்புறம் எழுதுறேன். கடந்த ரெண்டு மாசமா நல்லா அதிகமான வேலை. என் மச்சுனனோட கல்யாணம்... என்னோட அத்தைக்கு இருதய அறுவை சிகிச்சை (ஆப்பரேசன்)..... என்னோட அம்மாக்கு கால் வலி... கல்லூரியில் வேலை... அப்படி இப்படின்னு இந்த பக்கமே வர முடியல...
சரி இப்போ வந்துட்டோம்ல... கடவுள் புண்ணியத்துல ஏதாவது எழுத முடியுமான்னு பாப்போம் (இதுக்கெல்லாம் எதுக்குப்பா கடவுள் புண்ணியம்னு.... நாத்திகமா கேக்காதிங்க. இதுக்கு மட்டும் இல்ல... எல்லாத்துக்கும் கடவுளோட புண்ணியம் வேணும்).
ஒன்னு தெரியுமா, இந்த பக்கம் வர முடியாத அந்த ரெண்டு மாசமும் அப்போ அப்போ ஏதாவது மனசுல எழுதனும்னு தோணிகிட்டே இருக்கும். வார்த்தை உச்சரிப்புகளின் மகிமை பத்தி தோணுச்சு, உறவுகள் பத்தி தோணுச்சு, வீடு பத்தி தோணுச்சு... இன்னும் ஏராளமா... திரும்பவும் தோணும். அப்ப தெளிவா எழுதுறேன்.
இப்ப விஷயம் என்னானா.... என்னோட கடைசி பதிவுல எந்திரன் படம் பத்தி எழுதி இருந்தேன்ல... அத பாதியிலயே விட்டுட்டு போயிட்டேன். இப்போ அத பத்தி எழுதுறது சுத்தமா நல்லா இருக்காது. ஏன்னா அதப் பத்திதான் அளவுக்கு அதிகமா எலாரும் எழுதிட்டாங்களே... (சன் டிவி ல இந்த படத்தப் பத்தி போதுமான அளவுக்கு எல்லாத்தையும் காட்டிட்டாங்க. இன்னமும், "ரஜினியும் ஐஸ்வர்யாவும் படப்பிடிப்புக்கு வந்த காட்சிகள்" அப்படின்னு ஒரு எபிசொட் மட்டும் தான் போடல.). அந்த பதிவுல திரை அரங்குகள் பத்தியும் ரசிகர்கள் பத்தியும் அப்புறமா எழுதுறேன்னு சொல்லி இருந்தேன்ல. அதப்பத்திதான் இந்த பதிவு. (இப்பதாங்க தலைப்புக்குள்ளயே வர்றோம்...)
எங்க ஊர்ல இருக்குற எந்த திரை அரங்கும் வாங்குற காச கொஞ்சம் கூட செலவழிச்சு சுத்தமா பராமரிக்குறது இல்ல. அவ்வளவு சுகாதார குறைவு. இந்திரன் படத்துக்கு நாங்க ஆறு பேறு போயிருந்தோம். மொத்தமா 900 ரூபா அனுமதி சீட்டுக்கு மட்டும் செலவானது. ஒரு ஆளுக்கு, 150 ரூபா. நாங்க அவ்வளவு பணம் குடுத்து, ரொம்ப சொகுசா பஞ்சு மெத்தை இருக்கைல உக்காந்து படம் பாத்தோம்னு நெனைக்காதிங்க. மரக்கட்டை இருக்கைல உக்காந்து தான் படம் முழுசையும் பாத்தோம். ஒரு பயத்தோடவே... வீட்டுக்கு மூட்டை பூச்சி வந்துறுமோ... பக்கத்துல உக்காந்து படம் பாக்குற ரசிக சிங்கங்கள்ல யாரவது நம்ம இருக்காய் மேல கால தூக்கிபோட்டுருவான்களோ... அப்படின்னு ஏகப்பட்ட பயத்தோடவே படம் பாக்க வேண்டியிருக்குது. சரி, இருக்கைகள் தான் இப்படி இருக்குது, அரங்காவது சுத்தமா இருக்குதான்னு பாத்தா... பாசி படர்ந்த ரொம்ப கவனமா நடப்போமே... அந்த மாதிரி தான் நடக்க வேண்டியதா இருந்துச்சு. ஏன்னா தரை எல்லாம் சளியோட சேந்த எச்சி, வெத்திலை எச்சி, பாக்கு எச்சி, இன்னும் பிற... அவுங்க அவுங்களுக்கு வாயில வந்ததெல்லாம் தரைல தெளிச்சிருந்தாங்க. இது போக, படம் போடுறதுக்கு முன்னாடி, படம் ஓடிகிட்டு இருக்கும் பொது, இடைவேளை சமயத்துல, மற்றும் எல்லா நேரத்துலயும், ஒரே புகை மண்டலம். முன்னாடி பின்னாடி பக்கத்துல இருந்து எல்லா பக்கத்துல இருந்தும் புகையின் வீச்சு.... (உண்மையிலயே நான் இத அதிகப்படுத்தி சொல்லலைங்க... உண்மையிலயே இப்படிதான் இருந்ததது.) படம் போடுறதுக்கு முன்னாடியும் இடைவேளை நேரத்துலயும், "புகை பிடிக்கக் கூடாது", "எதிர் சீட்டு மேல கால் வைக்க கூடாது" அப்படின்லாம் அறிவிப்பு செய்திகள திரைல காட்டுறாங்க. எல்லாமே சம்பிரதாயம் தான். இப்படி அறிவிப்பு செய்யிற திரை அரங்க நிர்வாகிகள், அத கடைப்பிடிக்க தேவையான முயர்ச்சிகள செய்யலாம்ல.... அத செய்யல.
அங்க இருந்த கழிப்பறை...... சுகாதாரக் கேட்டின் உச்சகட்டம். அந்த கழிப்பறை, தண்ணிய பாத்து பல வருசமா ஆகிருக்கும் போல. உள்ள தண்ணி இல்ல. மூத்திரக் கோப்பை (யுரினால் பேசின்) இல்ல. மல கோப்பை, மலத்தால அபிசேகம் ஆகிருக்கு. அவ்வளவு அசிங்கம்.
இவுங்க வாங்குற, பணத்துல ஒரு 5% ஆவது இந்த மாதிரியான விசயங்கள சரி பண்ணுறதுக்கு செலவு பண்ணலாம்ல. பண்ண மாட்டுறாங்க...
இதையெல்லாம் பாக்கும் போதுதான், பேசாம, 30 ரூபாக்கு டிவிடி வாங்குனோமா, வீட்ல உக்காந்து, குடும்பத்தோட பார்த்தோமான்னு இருக்கலாம்னு தோணுது. டிவிடி க்கு எதிரா போராட்டம் நடத்துற போராளிகல்லாம் இதையும் கொஞ்சம் கவனத்துல எடுத்துக்கலாம். இது என்னோட தாழ்மையான கருத்து.
செருப்பால அடிக்கனுங்க.... என்னத்தான். என்ன யாருங்க திரை அரங்கத்துக்கு போயி படம் பாக்க சொன்னது....? எனக்கு திமிருதானங்க... பணத் திமிருங்க... பேசாம, பிள்ள குட்டிகளுக்கு துணிமணி எடுத்து குடுத்துட்டு வீட்ல உக்காந்து, பொண்டாட்டி ஆக்கி குடுக்குற கறிசோற சாப்ப்டுட்டு, நிம்மதியா ஒரு தூக்கம் போட்டுருக்கலாம்.
திரை அரங்கத்துக்குப் போயி படம் பாக்குரதுங்க்றது திமிரு தனத்தின் உச்சகட்டம்ங்க.... நல்லா யோசிங்க.

07 அக்டோபர் 2010

எந்திரன்... சந்திரன்... அமாவாசையா... பௌர்ணமியா !?
எந்திரன். ஏறக்குறைய ஒரு மந்திர வார்த்தை. இது ஒரு முழு நீளத் திரைப்படமா ஒரு வழியா வெளியாகிருச்சு. முதல் நாள் இரவு காட்சிக்கு போயிட்டோம். மொத நாளே அதிகமான காசு குடுத்து படத்துக்கு போனது வெக்கமாத்தான் இருந்துச்சு... சந்தர்ப்ப சூழ்நிலைகள் அப்படி அமைஞ்சதுனால போக வேண்டியதா போச்சு (உண்மையிலயே எனக்கு ஆர்வம் இல்லையான்னு கேக்காதிங்க... நான் கமலஹாசன் படத்துக்கே முதல் நாள் போக மாட்டேன்). நான், என் மனைவி, அண்ணி, சகலை, முகி, வினஷ்யா... ஆறு பேரும் போனோம். (டிக்கெட் காசு, டிக்கெட் எடுக்குறதுக்கு செஞ்ச முயற்சி, தியேட்டரோட சுத்தம், ரசிகர்களின் சத்தம்... இதையெல்லாம் பத்தி அடுத்த பதிவுல எழுதுறேன்)

04 அக்டோபர் 2010

நேர்மையா... திமிரா...?

நேர்மையா... திமிரா...?
கோவில்பட்டில லக்ஷ்மி சங்கர் னு ஒரு உணவு விடுதி இருக்குது. கோவில்பட்டில இருக்குற ஒரு சில சைவ உணவகங்கள்ள இது ஒரு நல்ல உணவகம். சுவையாவும் சுத்தமாவும் எல்லா உணவும் இருக்கும். அந்த உணவகத்துக்கு ஒரு நாள் நானும் என் மனைவியும் சாப்பிட போனோம். தேவையானது எல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு பில் (பில்லுக்கு தமிழாக்கம் என்னாங்க...?) வாங்கி பாத்தேன். 42 ரூபாய் பில் வந்திருந்தது. எங்களுக்கு பரிமார்னவர்க்கிட்ட 50 ரூபாய் குடுத்தேன். பில் Justify Fullதொகைய்ய கல்லால்ல கட்டிட்டு, மிச்சம் 8 ரூபாவ... ஒரு 5 ரூபா காசாவும், ஒரு 2 ரூபா காசாவும் ஓரு 1 ரூபா காசாவும் கொண்டு வந்தாரு. நான், அவருக்கு 5 ரூபா டிப்ஸ் (டிப்சுக்கு தமிழ்ல என்னாங்க...?) கொடுத்தேன். ஓரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. என்னான்னா... நான் கொடுத்த அஞ்சு ரூபாவ திரும்பவும் என்கிட்டயே குடுத்துட்டு, என் கைல இருந்த 2 ரூபாவ மட்டும் டிப்ஸா எடுத்துகிட்டாரு. எனக்கு ரொம்ப ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருந்துச்சு. இப்படியும் ஓரு ஆளா...? இவரு எப்பவுமே இப்படித்தான் இருப்பாரா.... இல்ல அன்னைக்குத்தான், ஏதோ ஓரு நெனப்புல அப்படி நடந்துக்கிட்டாரா... ஒன்னும் வெளங்கல.
பொதுவாவே... இந்த மாதிரி டிப்ஸ் குடுக்குறது, அவுங்க அவுங்களோட கஞ்சத் தனத்தையும், பெருந்தன்மையையும், திமிரையும் காமிக்கும், அப்படிங்கறது என்னோட தாழ்மையானக் கருத்து (இது, குடுக்குற ஆளையும், வாங்குற ஆளையும், குடுக்கப்பட்ற இடத்தையும் பொறுத்தது).
இந்த சம்பவத்துல, இவரு என்னோட கஞ்சத்தனத்த நக்கல் பண்ணுனாரா...? என்னோட பெருன்தன்மைய அவமதிச்சாரா...? என்னோட பணத்திமிர ஓங்கி ஓரு அறை அறஞ்சாரா....? ஒன்னும் புரியல.
எனக்கு அவரு மேல ஓரு மரியாதை வந்தது. இப்படியும் ஓரு ஆளான்னு...