12 செப்டம்பர் 2023

மறுபடியும் மீட் பண்ணுவோமா?

 வணக்கம்! 

நான் அருள்மிகு கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில (அதாங்க, AKCE ல) உங்களோட படிச்ச ஒருத்தன் (ஒருத்தி னு கூட வச்சுக்கோங்க) பேசுறேன்.

அது அநேகமா, 1994 வது வருசத்துல, செப்டம்பர் இல்லனா அக்டோபர் மாசமா இருக்கும்னு நெனைக்கிறேன். நாம எல்லாரும் வேற வேற ஊர்கள்ல இருந்து வேற வேற கனவுகளோடு இன்ஜினியர் ஆகிருவோம்ங்கிற நம்பிக்கையோட, படங்கள்ல பாத்த மாதிரிதான் காலேஜ் இருக்குங்கிற குதூகலத்தோட நம்ம காலேஜ்ல அடியெடுத்து வச்சோம். மொத நாள் ரொம்ப பேரு அவிங்க அவிங்க அப்பா அம்மா மாமா னு பல ஒறவுகளோட வந்திருந்தோம். கொஞ்ச பேரு அவிங்களாவே பெட்டிய தூக்கிட்டு வந்திருந்தோம். ஹாஸ்டல்ல விட்டுட்டு போயிட்டாய்ங்க. போகும் போது, சூதானமா இரு(மா)டா .... சாமானெல்லாம் உள்ள வச்சு பூட்டிக்கோ.... கூட இருக்குறவய்ங்க யாரு என்னன்னு தெரியாது... எடுத்தாலும் எடுத்துருவாய்ங்க.... பத்திரமா வெச்சுக்கோன்னு, சில பல அறிவுரைகள அள்ளித் தெளிச்சுட்டு போனாய்ங்க.

அடுத்த நாளு, கிளாஸ் ஆரம்பிச்சாய்ங்க. அங்க புதுசா கொஞ்ச பெரு டேஸ்காலர்  னு சொல்லி அறிமுகமானாய்ங்க. கோஎட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்தவய்ங்க ஒருபக்கம் டீசெண்டா சைட் அடிச்சா.... இன்னொரு பக்கம் பசங்க பொண்ணுங்கன்னு தனித்தனியா படிச்ச ஸ்கூல்ல இருந்து வந்தவய்ங்க வெக்கப்பட்டும், கூச்சப்பட்டும் வெறிச்சுப்பாத்தும் சைட் அடிச்சுக்கிட்டாய்ங்க.

மொத  வருசம் நமக்குத்தான் டிபார்ட்மென்ட் பிரிக்கலல... செக்சன் செக்சனா தான பிரிச்சிருந்தாய்ங்க. சீனியர்ஸும் அப்பப்போ நம்மள ராகிங் செஞ்சு பிரி பிரி னு பிரிச்சாய்ங்க. அப்புறமா நாம கோபப்பட்டு, அவிங்க ஆத்திரப்பட்டு, நம்மள ஹாஸ்டலுக்குள்ள புகுந்து அடிக்க வந்து, நாம அடி வாங்கி, அவிங்கள நாம அடிச்சு, காலேஜ் ஐ.டி.சி. விட்டு கொஞ்ச நாளைக்கப்புறம் திரும்பவும் காலேஜுக்கு வந்தோம்.

மொத வருசமே நமக்கு சயின்ஸ் எக்சிபிசன் நடந்துச்சு..... ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா? கொஞ்ச பேரு கலந்துக்கிட்டோம், ரொம்பப்பேரு பாத்தோம்..... எல்லாத்தையுந்தான். அப்புறமென்ன, அப்டியே ஃபர்ஸ்ட்  இயர் முடிஞ்சுச்சு. ரிசல்ட் வந்துச்சு. ஃபர்ஸ்ட் மார்க் செகண்ட் மார்க்ல இருந்து, ஒரு அரியர் வாஷ் அவுட் வரைக்கும் சோகமும் சந்தோஷமும் கலந்து கட்டி, டிபார்ட்மென்ட் பிரிஞ்சு (சிலருக்குப் பிடிச்சும் சிலருக்குக் கெடச்சும்) ரெண்டாவது வருசத்துக்குள்ள போனோம்.பர்ஸ்ட் இயர்ல வேற செக்சன்ல இருந்த நம்ம ஆளு நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கே வந்த சந்தோஷத்தோடயும், நம்ம ஆளு வேற டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருச்சேங்கற வருத்தத்தோடயும் இருக்கும்போதே, டிபார்ட்மெண்ட் ரெப்பு, செகரட்டரி எலெக்சன்... க்ளாசுக்குள்ள குரூப்பு, அதுக்கான பிரச்சாரம், ட்ரீட்டு (அதுவுந்தான், எல்லாந்தான்) ரிசல்ட்டு, அதுக்கப்புறம் ஒரு வார டூரு. தோத்த குரூப்பு டூருக்கு வரமாட்டேன்னு வீம்பு காட்டுறது.... எறங்கி போயி கூப்புட்றோம்ங்கிறத வெளிய காமிச்சுக்காம அவிங்களையும் டூருக்கு வர வைக்கறது. இப்டிலாம் டூருக்கு ரெடி பண்ணுனா... கடைசி நேரத்துல பஸ்சு வரல்லன்னு சொல்லி டூர் கேன்சலாகி மறுவாரம் டூருக்குப் போனோம். அந்த ஒரு வாரத்துல காதல் மலர்ந்து, நட்பு பெருகி, பாசம் படர்ந்து திரும்பவும் காலேஜ் வந்து சேந்தோம் .

ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா... நம்ம காலேஜ்ல, பொண்ணுங்களாம் அப்போ சேல தான் கட்டிட்டு வரணும். இந்த விசயத்த நம்ம செட்டுப் பொண்ணுங்கதான் முன்ன நின்னு பேசி பொண்ணுங்க சுடிதாரும் போட்டுட்டு வரலாம்னு பெர்மிசன் வாங்குனாங்க. சந்தோசந்தானாலும், பசங்களுக்கு கொஞ்சம் வருத்தந்தான் .

அப்டியே நாளும் நகந்துச்சு. நமக்குள்ள கொஞ்ச பேரு ரொம்ப பயங்கரமா படிச்சாய்ங்க... கொஞ்ச பேரு பயங்கர மோசமா படிச்ச்சாய்ங்க. ஆனா எல்லாரும் சேந்தே  இருந்தாய்ங்க. நோட்ஸ் ஷேர் பண்ணிக்கிட்டாய்ங்க... குரூப் ஸ்டடி பண்ணாய்ங்க.... தெரிஞ்சவிங்க தெரியாதவைங்ககளுக்கு சொல்லி குடுத்து பாஸ் பண்ண வச்சாய்ங்க. முடியலைன்னா அப்டியே விட்டாய்ங்க. பிட்டு அடிச்சி மாட்னாவைங்க ஒரு பக்கம் இருந்தா, இன்னொரு பக்கம் பிட்டு அடிச்சு பாஸ் பண்ணவைங்களும் இருந்தாய்ங்க. இதெல்லாம் எதுக்குடா வம்பு னு ஸ்கூட் அடிச்ச கோஷ்டியும் இருந்துச்சுல. 

சேந்து இருந்த எல்லாருமே குரூப் குரூப்பா இருந்தாய்ங்க. நெறையா  பேரு ரெண்டு குரூப்ல ஏதாவது ஒன்னுல இருப்பாய்ங்க, கொஞ்ச பேரு ரெண்டுக்கும் நடுவுல இருப்பாய்ங்க. இன்னும் கொஞ்ச பேரு இருந்தாய்ங்க.... அவிங்க இது எதுலயுமே  இல்லாம தனியா ஒரு குரூப்பா சுத்துனாய்ங்க.

டிபாட்மென்ட் சிம்போசியம்... அதுல நடக்குற கல்ச்சுரல்ஸ், நம்ம காலேஜ் கல்ச்சுரல்ஸ் (சைனோசர்.... ஞாபகம் இருக்கா), வெளி காலேஜ்கள்ல நடக்குற கல்ச்சுரல்ஸ். இதுலெல்லாம் கலந்துக்கிட்டது... பரிசு வாங்குனது, தோத்தது. சீனியர்ஸும் நம்ம நட்பு வட்டத்துக்குள்ள வந்ததது... அவிங்க மூலமா பாடத்துல இருந்து பரீட்சை  வரை எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டது. நாம, அவிங்களப் பாத்து "ஏங்க... சூப்பருங்க" ன்னு ஆச்சர்யப்பட்டது... நம்மள பாத்து அவிங்க " டேய்... எப்புட்றா" ன்னு கேட்டது வரைக்கும் நடந்துச்சு. சீனியர்ஸ்ல சில பேரோட, நாம வா(டி)டா போ(டி)டா ங்கற அளவுக்கு நட்பு பலமாச்சு. நம்ம ஜுனியர்ஸும் நம்மளோட அப்டி பழகுற மாதிரி நாமளும் நடந்துக்கிட்டோம். இன்னமும் நம்ம சீனியர்சோடயும்  ஜுனியர்சோடயும் நம்ம நட்பு அப்டியே தொடர்றதுக்கு வெத அங்க விழுந்துருக்கு. 

TIES (தமிழ்நாடு இன்டெர் இன்ஜினியரிங் ஸ்போர்ட்ஸ்), இன்டெர் காலேஜ் கல்ச்சுரல்ஸ் ன்னு, படிப்போடு சேந்து எல்லாத்துலயும் எல்லா லெவல்லயும் அனுபவிச்சோம். ஃப்ரென்ட்ஸ் வீட்டுக்கெல்லாம் போனோம், நம்ம வீட்டுக்கு ஃப்ரென்ட்ஸ் வந்தாங்க. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி இருந்துச்சு. விதவிதமான அனுபவங்கள். ஃப்ரென்டு, வீட்டுல இல்லனாலும் அவிங்க வீட்டுக்கு நாம போயி  சாப்ட்டு வர்ற அளவுக்கு நெருக்கம்  அதிகமாச்சு.

மூணாவது வருசத்துல 15 நாள் டூரு. நாலாவது வருசத்துல ஒரு மாச ஆல் இந்தியா டூரு ன்னு, அது ஒரு அனுபவம். அதயெல்லாம் ஒரு வாழ்க்கை அனுபவம்னே சொல்லலாம். அங்க நம்ம காலேஜ்ல  நமக்கு என்ன தான் கிடைக்கல? நட்புல இருந்து காதல் வரைக்கும், சந்தோஷத்துல இருந்து சோகம் வரைக்கும், மோகத்துல இருந்து காமம் வரைக்கும், நல்லதுல இருந்து கெட்டது வரைக்கும் எல்லாந்தான் கெடச்சது.

எத்தன பேரு சைட் அடிச்சுக்கிட்டே இருந்து சொல்லாமலேயே கெளம்பி போயிட்டாய்ங்க. எத்தன பெரு தைரியமா சொல்லி கல்யாணம் வரைக்கும் போனாய்ங்க. மின்சாரக் கனவு கதைலருந்து, காதல் தேசம் கதை வரைக்கும் எத்தன கதைகள நம்ம காலேஜ்ல பாத்துருப்போம். ரீல் லைஃப் அண்ணன் தங்கச்சிகளையும் மிஞ்சுற ரியல் லைஃப் அண்ணன் தங்கச்சிகளையும் நாம காலேஜ்ல பாத்துருக்கோம்ல.

கோனார் கேண்டின், கதிரவன் ஹோட்டல் கேண்டீன், அங்க சிதம்பரம் அண்ணன், கிருஷ்ணன் கோயில், பயில்வான் தியேட்டர் (நைட் 8 மணி ஷோ), பயில்வான் ஹோட்டல், மல்லி ரோடு ஒயிட் ஹவுசு, பட்டியக்கல், காலைல 4 மணிக்கு மொத பஸ்ஸ பிடிச்சு கள்ளு குடிக்க போறது, ஸ்ரீவில்லிபுத்தூர், பால்கோவா, செல்வி புரோட்டா கடை, ஆண்டாள் கோயில், ராஜபாளையம், ஆனந்தா தியேட்டர் புது படம், ஆனந்தா ஹோட்டல், மதுரைல இருந்து ஜெயவிலாஸ் பஸ்ல வர்றது, அப்பப்போ ஸ்ப்ளெண்டர், புல்லட், ஆர் எக்ஸ் 100 னு மோட்டார் பைக்ல வர்றது. வாரக் கடைசில ஊருக்கு போக காசு இல்லாம, பசங்க பசங்கி எல்லார்ட்டையும் இருக்குற காச வாங்கிட்டு ஊருக்கு போறது ன்னு எவ்ளோ பண்ணிருக்கோம். யோசிச்சு பாத்தா, ஆஹா னு இருக்குல்ல.

அந்த நாலு வருசத்துல எவ்ளோ பேர பாத்து ஆச்சர்யபட்ருப்போம், அவிங்களோட பேசணும்னு ஆசைப்பட்ருப்போம், எவ்ளோ பேர்ட்ட திட்டு வாங்கி அசிங்கப்பட்ருப்போம், நம்மகிட்ட பேச வந்த எவ்ளோ பேர தெரிஞ்சோ தெரியாமலோ உதாசீனப் படுத்திருப்போம், எவ்ளோ பேர கேலி பண்ணி சிரிச்சுருப்போம், எவ்ளோ பேர்ட்ட நாம அழுதிருப்போம், எவ்ளோ பேரு நம்மள்ட்ட அழுதிருப்பாய்ங்க, எவ்ளோ பேரோட துக்கத்துலயும் வலியிலயும் பங்கெடுத்துருப்போம்..... எல்லாந்தான் அந்த நாலு வருசமும் நடந்துச்சு.

எல்லாமும் சேந்துதான், 1994 ல ஆரம்பிச்ச அந்த நாலு வருஷம் 1998 ல முடிஞ்சது. பாடி திரிந்த  பறவைகளோட, முஸ்தபா முஸ்தபா வையும் பாடி,  ஃபேர்வெல் ஃபங்சன் ல கண்ணீரோட கலஞ்சு பிரிஞ்சு போனோம். இன்னமும் கொஞ்ச பேரோட அப்டியே தொடர்புல இருக்கோம். கொஞ்ச பேரு, என்ன ஆனாய்ங்கனே தெரில. கொஞ்ச பேரு இந்த ஒலகத்த்துலயே இல்ல.... நம்மள விட்டு போயே  போயிட்டாய்ங்க. கொஞ்ச பேர  இப்போ பாத்தா "ஏய்... நீயா... அடையாளமே தெரியல" ன்னு சொல்லுவோம்.

சொல்லுவோமா.....?

நாம காலேஜ் முடிச்ச இந்த 25 வது வருசத்துல திரும்பவும் பாப்போமா? 

எல்லாரோடயும் திரும்பவும் பேசுவோமா?

இந்த சந்திப்பு புதுசா இருக்கும். அடையாளம் மாறிப்போன, வாழ்க்கைல வேற லெவலுக்குப் போன,  வேற மாறி மெச்சூரிட்டி லெவல்ல இருக்குற நம்ம பிரெண்ட்ஸ பாத்து திரும்பவும் ஆச்சர்யப்படுறதா இருக்கும். 

அப்டிலாம் அவ(ள்)ன்ட்ட நான் நடந்திருக்க கூடாதுன்னு ஏதாவது நெனச்சுட்டு இருந்தோம்னா, அதயெல்லாம் பேசி சரி செஞ்சுறலாம். நமக்கு சொல்லிக்குடுத்த வாதியாருங்க யாருலாம் இப்போ இருக்காங்களோ அவுங்கள எல்லாம் சந்திப்போம் .

இந்த டிசம்பர் மாசம் 2023 ல ஒரு நாள், நாம நாலு வருசம் வாழ்ந்த நம்ம AKCE லயே நாமெல்லாம் திரும்பவும் சந்திப்போம். நெறய பேசுவோம். 

உங்களப் பத்துன விபரங்களயும், உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களயும் இந்த கூகுள் ஃபார்ம்ல ஃபில் பண்ணி அனுப்புங்க.


இந்த விசயத்த, உங்க தொடர்புல இருக்குற நம்ம பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் அனுப்புங்க. அவுங்களயும் ஃபில் பண்ணி அனுப்ப  சொல்லுங்க.

வாங்க மீட் பண்ணுவோம். இந்தக் கடிதத்துல சொல்ல மறந்த பல கதைகள அங்க பேசுவோம். அடுத்த 25 வருசத்துக்கான மகிழ்வான நினைவுகளை அங்கயிருந்து எடுத்துட்டுப் போவோம்.

நன்றி!!!


25 ஆகஸ்ட் 2023

எப்டி இருக்கு... நல்லா இருக்கா?

 "எப்டி இருக்கு... நல்லா இருக்கா?"

"ஹ்ம்ம்.... நல்லா இருக்கு... டேஸ்ட்டா இருக்கு.... பட், கொஞ்சம் க்ரிஸ்பி யா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.😜"

"அதுக்கு, க்ரிஸ்பியா இருக்குறத எடுத்து சாப்பிடணும்.😏"

இது ஒரு உரையாடல். இதுல என்னமோ ஒன்னு கொறையுதுல...?

-------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த உரையாடல் இப்டி இருந்தா எப்படி இருக்கும்:?

1. "எப்படி இருக்கு... நல்லா இருக்கா?"

   "ஹ்ம்ம்.... நல்லா இருக்கு... டேஸ்ட்டா இருக்கு.... கொஞ்சம் இரு, நல்லா க்ரிஸ்பி       யா இருக்குற வேற ஒன்ன எடுத்து சாப்ட்டு பாக்குறேன்.😊"

   "ஹ்ம்ம்.... சாப்ட்டு பாத்து சொல்லு..."

   "ரெண்டுமே நல்லா இருக்கு..... செம... சூப்பர்😍."

--------------------------------------------------------------------------------------------------------------------------

2. "எப்படி இருக்கு... நல்லா இருக்கா?"

    "ஹ்ம்ம்.... நல்லா இருக்கு... டேஸ்ட்டா இருக்கு.... பட், கொஞ்சம் கிரிஸ்பி யா              இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்."

    "இரு, க்ரிஸ்பியாவும் இருக்கு. நான் எடுத்து தர்றேன். சாப்பிட்டு பாரு😗."

    "ஹே... சூப்பர். இதுவும் நல்லா இருக்கு.... செம😘."

04 நவம்பர் 2022

வேற வழியில்லாமலாம் சேர்ந்து இருக்கல.... வேற வழிலாம் தேவையில்லன்னு தான் இப்டி சேர்ந்திருக்கோம்

உங்க ரெண்டு பேருக்கும், உங்க பெயரோட  முதல் எழுத்து "எஸ்" தானா ..... இன்சியல்  கூட ஓரே மாதிரி தானா ..... அட பாருடா, ராசி நட்சத்திரம் கூட ஒரே மாதிரியா..... அதெப்படிங்க நீங்க கல்யாணம் கட்டிக்கிட்டிங்க..... பிரச்சனை இல்லாம சந்தோசமா இருக்கீங்களா.....  இப்டி எவ்ளோ கேள்விகள நாம சந்திச்சிருக்கோம், இந்த 21 வருசத்துல.....? எல்லோரோட, எல்லா இந்த மாதிரியான கேள்விகளுக்கும் நம்மகிட்ட இப்பவும் எப்பவும் இருக்குற ஒரே பதில் "ஆமா" தான. இதெல்லாம் முடிஞ்ச பின்னாடி, அடுத்த கேள்வி வரும்.... அப்டினா, நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்களா......  அதுக்கு பதில், "மேரேஜ் பண்ணோம், லவ் பண்றோம்".  

அப்போ, கல்யாணம் ஆனதுல இருந்து நீங்க ரெண்டு பேரும் அப்பிடியே தான் இருக்கீங்களான்னு  கேட்டா, இல்லைனு தான் சொல்லணும். நெறய மாறிட்டோம்..... மாறிருச்சு. அதிகமாவும் ஆகிருக்கு, குறைஞ்சும் போயிருக்கு. 

ஆனா, அந்த லவ் தான், நம்மள்ல யாரோ ஒருத்தர், எத்தனையோ தடவ, தெரிஞ்சோ தெரியாமலோ, தள்ளிவிட்டோ தூக்கி எறிஞ்சோ கீழ விழுந்து நொறுங்க போகுதுங்கிற கடைசி நொடில, நம்மளோட  நாலு கைகள்ல ஒரு கை சட்டுனு நீண்டு, கப்புனு பிடிச்சு, அப்டியே அலேக்கா தூக்கி வச்சுருது. 

ஒருத்தர ஒருத்தர் முழுசாலாம் புரிஞ்சுக்கல..... புரிஞ்சுக்க ட்ரை பண்றோம். அதுதான், எல்லாநேரத்துலயும்  அக்சப்ட்னஸ அதிகமாக்க வச்சுருக்கு.....   நீயும் நானும் எப்டியோ, அப்டியே ஏத்துக்க வச்சுருக்கு. கூடுறதையும், கொறையுறதையும் புரிஞ்சு ஏத்துக்க வச்சுருக்கு. 

நாம வேற வழியில்லாமலாம் சேர்ந்து இருக்கல.... வேற வழிலாம் தேவையில்லன்னு தான் இப்டி சேர்ந்திருக்கோம். இப்டியே இருப்போம். இன்னமும் அந்த புரிதல் அதிகமாகட்டும். வருஷம் கூட கூட இதுதான் தேவைன்னு நம்புறேன். 

இறுதிவரை இணைந்திருந்தே வாழ்வோம். இல்லாதுபோனால், இணைந்திருந்ததை நினைந்தே வாழ்ந்திருப்போம்.

வா.... 22வது வருச மண வாழ்க்கையையும் ஒரு கை பாத்துருவோம்..... நம்மக்கிட்டதான் "காதல் எனும் பேராயுதம்" இருக்கே!!!

#திருமண நாள் #சங்கீமாகாதல் #நவம்பர்4 #weddinganniversary #நீயும்நானும்நாம் 


24 மே 2021

நீயும் நானும் எப்பவும் "ஐ 💘லவ்💘 யூ" வாவே இருப்போம்.
 

04.11.2020

நம்மளுக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு, நாம ரெண்டுபேரும் எப்டி இருந்தோமோ அப்படி இல்ல இப்ப. எவ்வளவோ மாறிட்டோம். நம்ம ரெண்டு பேர விட்டும் நெறயா வெளிய போயிருக்கு... ரெண்டு பேருக்குள்ளயும் நெறயா உள்ள வந்திருக்கு. என்னல்லாம் னா... எல்லாந்தான். எவ்வளவு னா... எவ்வளவோ தான்.

ஆனா, அந்த ஒன்னு மட்டும் இன்னமும் நம்ம ரெண்டு பேர விட்டும் போகவே மாட்டேன்னு ஒட்டிக்கிட்டே நம்ம கூடவே இருக்கு.
அவ்வளவுதான்.... முங்கிருச்சனு நெனச்சப்போலாம், நம்மள லேசாக்கி பூமிக்கு மேல மெதக்க வச்சிருக்கு. ரெண்டு பேருக்கும் பிடிக்காத எவ்வளவோ விசயத்த, ரெண்டுபேரும் செஞ்சாலும்... ரெண்டுபேரையும் இன்னமும் பிடிக்க வச்சுக்கிட்டே தான் இருக்குது. நம்ம ரெண்டுபேருக்கும் எடையில இருக்குற, காத்துக்கான எடவெளியக் கூட கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுக்கிட்டேதான் இருக்குது.
அந்த ஒன்ன மட்டும் நாமளும் விட்டுறவே வேண்டாம். நீயும் நானும் எப்பவும் "ஐ 💘லவ்💘 யூ" வாவே இருப்போம்.
அப்டியே, மெதுவா 20 ஆவது வருசத்துக்குள்ள போயிருவோம்... வா 😍😍😍

03 நவம்பர் 2019

பதினெட்டு முடிஞ்சு பத்தொம்போது

"அப்பா.... நீ பெரிய அறிவாளிப்பா..."
"ஆனா பிள்ள... நீ ஒரு முட்டாள் தெரியுமா..."
"ஏன்...?"
"நான் அறிவாளிங்கறதுனால தான் உன்ன கட்டிக்கிட்டேன்...
நீ முட்டாள்ங்கிறதுனால தான் என்ன கட்டிருக்க.... ஹா ஹா ஹா...."
"போயாங்ங்ங்...."  

நெஜமாவே, எனக்கு பயமாத்தான் இருந்துச்சு... பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி, நாம மொத மொதலா பாத்தப்ப, எனக்கு நீ ஒரு முழு டம்ளர் 'டீ' ல அரை டம்ளர் 'சீனி' போட்டு கலந்து தர்ற வரைக்கும்.  இன்னைக்கு வரைக்கும் அந்த தித்திப்பு என் மனசுல அப்படியே தான் இருக்கு. நான் எப்போலாம் பின்னாடி போறேனோ, அப்போல்லாம் என்னய இழுத்து ஒனக்கு முன்னாடி விட்ரும்.

அது எப்படி பிள்ள.... நான் ஒனக்கு கட்டுன கயிற வச்சே, என்னோட மனசையும் ஒடம்பையும் ஒன்னோட சேத்துக் கட்டி வச்சுக்கிட்ட...?
இன்னைக்கு வரைக்கும், பள்ளங்கள மூடுற போதும்... மேடுகள கடக்குறபோதும்.... உன்ன நானும், என்ன நீயும் விட முடீறதே இல்ல.

எத்தன தடவ உன்ன நீ முட்டாள்னு, என்னால, உணர்ந்துருப்பியோ எனக்குத் தெரியாது. ஆனா, நீ அறிவாளி தான்னு என்ன ஒவ்வொரு நொடியும் இப்போ வரைக்கும் ஒனரச் செஞ்சுட்டேதான் இருக்க. 

நம்ம ரெண்டுபேருக்கும் இடைல  இருக்குற அன்பு, பாசம், காதல், காமம், ஆசை, சிரிப்பு லாந்தான், நம்மள பாத்து அப்பப்போ  வர்ற கோபம், அயர்ச்சி, வெறுப்பு, சந்தேகம் எல்லாத்தையும் வெறட்டி விட்டுட்டு நம்மள ஆச்சரிய பட வச்சுட்டு இருக்குது.... நம்ம மூளைல  'என்டோர்பின்'ன சுரக்க வக்கிது. 

இன்னமும், நம்மள கேக்கத்தான செய்ய்யுறாங்க.... நீங்க லவ் மேரேஜா னு...? அவுங்களுக்கு, அந்த சந்தேகம் அப்டியே இருக்கட்டும்..... நாம , அந்த சந்தேகத்த அவுங்களுக்கு அதிகப்படுத்திகிட்டே... அப்டியே,  
          பத்தொம்போதாவது வருசத்துக்குள்ள போயிருவோம்....

                  "எல்லோருக்குமான எனது எல்லாமும் உனக்கும் உண்டு. 
                  உனக்கான எனது எதுவும் எவருக்கும் இல்லை"

                #திருமணநாள் #சங்கீமாகாதல் #04thNovember  


    


18 மே 2018

சுடர் விழி

தூறிய மழைத் துளி தூரமாய் போனதேன்...
சுட்டும் உன் சுடர் விழி எனைத் தீண்டாமல் சென்றதேன் ....

14 ஜூலை 2017

இடது கை பழக்கம், இளக்காரமா....?

இடது கை பழக்கம், இளக்காரமா....?
                 இன்று, நாங்கள் நால்வரும் (சங்கீதா, முகிலன், செந்திரு மற்றும் நான்) கோவில்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் கு சாப்பிட போயிருந்தோம். நான் 60 நொடிகளுக்கும் குறைவான தாமதத்தில் அவர்கள் மூவருக்கும் பின், உள் சென்றேன். அதற்குள், அவர்கள் மூவரும் கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்திருந்தனர். நான் டேபிளுக்கு வருவதற்கு முன்னரே முகிலனுக்கும் சங்கீதாவுக்கும் இடையில் வாஷ் பேசினில் இருக்கும் குழாயைப்  பற்றி, கோபம்  மற்றும் அதிருப்தியான முகங்களோடு ஒரு உரையாடல் நடந்துகொண்டிருந்தது. முகிலனிடமிருந்து வந்த, வாஷ்பேசினில் பொருத்தப்பட்டிருந்த குழாயை பற்றியக்  கேள்விக்கு சற்று அதிகமான (அக்கறையுள்ள) கோபத்தோடு சங்கீதாவிடமிருந்து  பதில் வந்துகொண்டிருந்தது. முகிலன் கண்களில் கண்ணீர் திரளத் தொடங்கியிருந்தது. பிரச்னை என்னவென்றால், இடது கை பழக்கமுள்ள முகிலனுக்கு அந்த ஹோட்டலில் இருந்த குழாய், அவனால், பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்த காரணத்தால், "இப்படியெல்லாம் (படத்தை பாருங்க) குழாய் யை வைத்தால் என்னை (முகிலனை) போன்றவர்களெல்லாம் எப்படி கை கழுவுவது" என்ற அவனளவில் நியாயமான கேள்வியை விரக்தியோடு எழுப்பிவிட்டது. 



                         இதற்கான பதிலாக சங்கீதாவிடமிருந்து "மெஜாரிட்டி எப்படி இருப்பாங்களோ அப்டித்தான் அவுங்களுக்காகத்தான் எல்லாத்தையும் வச்சிருப்பாங்க....இதுக்கெல்லாம் feel  பண்ணிட்டு இருக்காத.... அப்டி நமக்கு வேணும்னா, நாமதான் டிசைன் பண்ணனும்... நீ ட்ரை பண்ணு" னு வந்துருச்சு. இந்த பதில் முகிலனை ஹர்ட் பண்ணிருச்சு போல. அவன் கண்களை குளமாக்க , அவன் மனம் தயாராகிக் கொண்டிருந்தது.  "சரி விடு முகி... இதுக்கெல்லாம் feel  பண்ணாத" னு சொல்லி சாப்பிட்டு முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். 
               வீட்டுக்கு வந்த பின்ன தான், சங்கீதாக்கு, முகிலன் முகம் ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கே னு தோணி, என்ன னு கேட்டா. முகிலனும் ஒண்ணும்  இல்ல...ஒண்ணும் இல்ல... னு முகத்த திருப்பிகிட்டே இருந்தான். அவனோட மனசு மெதுவா ஜெயிக்க ஆரம்பிச்சுருச்சு. அவனை தொட்டு மெதுவா பேசி, இதுக்கெல்லாம் கலங்க கூடாது... என்ன ஆச்சு னு கேக்கும் போதுதான் சொல்றான்... "நான் ஹோட்டல் ல, அந்த டேப் அ மாத்தணும் னா  சொன்னேன்?.... ஏன் இப்படிலாம் இருக்கு.... எல்லாரும் யூஸ்  பண்ற மாதிரி சென்டர் ல, குழாயோட திருகு இருந்துச்சுன்னா எல்லாருக்கும் usefull ஆ இருக்கும் னு தான சொன்னேன்....அதுக்கு ஏன் நீங்க அப்டி பதில் சொன்னிங்க" னு கேட்டான். அப்போதான் திரும்பவும் (இதுக்கு முன்னாடியே பல தடவை, மற்றவங்களோட புரியாமையும் அறியாமையும், முகிலனோட இடதுகை பழக்கத்தை ரொம்பவே காயப்படுத்திருக்கு) அவனோட கஷ்டம் எங்க ரெண்டு பேருக்கும் புரிஞ்சது. அவன்  சொல்றது சரிதான்னு புரிஞ்சது.
             முகிலனோட இடது கை பழக்கம் எப்படி னா.... நாம வலது கைல செய்ற எல்லா விசயத்தையும் அவன் இடது கைல செய்வான். நாம இடது கைல செய்ற எல்லா விசயத்தையும் ("எல்ல்ல்ல்லா விசயத்தையும்") அவன் வலது கைல செய்வான். ஆக, நமக்கு நல்ல கையான சோத்தாங்கை, அவனுக்குப் பீச்சாங்கை. நமக்கு கெட்ட கையான பீச்சாங்கை, அவனுக்கு சோத்தாங்கை. இப்டி இருக்கும் போது, சாப்பிட்டு முடிச்சுட்டு அவன் எப்டி சோத்துக் கையோட குழாய திருகுவான் (நீங்க இடது கைல சாப்பிடறவரா உங்கள நெனச்சுக்கிட்டு, சாப்பிட்டு முடிச்சுட்டு படத்துல இருக்குற குழாயில எப்படி கை கழுவுவீங்க னு யோசிச்சு பாருங்க..... சிரமமா இருக்கும்ல....)?
           இதுக்கும் அதிகமா லாம் அவனுக்கு நடந்துருக்கு.... பந்தியில, இல்லனா ஹோட்டல் ல, அவன்  சாப்பிட உக்காந்து இலைல அவனோட சோத்தாங்கைய வைப்பான்.... உடனே எங்க இருந்தோ  ஒரு குரல்  ரொம்பவே கலாச்சார, ஒழுக்க அக்கறையோடு ஒலிக்கும் "தம்பி... வலது கைல சாப்பிடு... அது என்ன அசிங்கமா இடது கைல சாப்பிடுற..." னு. சின்ன வயசுல அவனுக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, எங்களை பாப்பான்... நாங்க அந்த குரலுக்கு விளக்க பதில் குடுத்துட்டு, நீ சாப்பிடு னு அவனை சாப்பிட வைப்போம். அவன் வயசு கூட கூட, இப்டி வர்ற குரல்கள் அவனுக்கு எரிச்சலை தர ஆரம்பிச்சு பொது இடங்கள்ல....குறிப்பா பந்தில உக்காந்து சாப்பிட்றத... ரொம்ப முக்கியமா, கோவில்கள் ல நடக்கும் பந்திகள் ல உக்காந்து சாப்பிடறது தவிர்க்க ஆரம்பிச்சுட்டான்.
          இன்னைக்குத்தான் சொன்னான்... அவன் 8 வது படிக்கும் போது, மதுரை கு ஒரு எக்ஸாம் எழுத கூப்டு போயிருந்தோம். அந்த எக்ஸாம் ஹால் ல இருந்த invigilator, "வலது கைல நீ வாங்குனா தான், நான் உனக்கு பேப்பர் தருவேன்" னு சொல்ல... இவன்,  "இல்ல மேடம், நான் லெப்ட் ஹேண்டர்" னு சொல்ல... அதுக்கு அவுங்க, "அதுனால என்ன.... நீ வலது கைல வாங்குனாதான் உனக்கு பேப்பர் தருவேன்" னு சொல்லி... கடைசில இவன் பெரிய தயக்கத்துக்கு பிறகு வலது கைல பேப்பர் அ வாங்கியிருக்கான் (யோசிச்சு பாருங்க... நாம (வலது கை பழக்கம் உள்ளவங்க) இடது கைல வாங்குவோமா... எவ்வளவு கஷ்டமா இருக்கும்...? அவ்வளவு கஷ்டத்தோட இருந்துருக்கான்).... இத இன்னைக்கு சொல்லி, feel  பண்ணுறான்.  நீ ஏன் அப்டி வாங்குன....? அவுங்கள்ட்ட "நான் வலது கைல வாங்குனா, உங்களுக்கு நான் disrespect பண்றதா ஆகிடும்" னு நீ  சொல்லிருக்க வேண்டியது தான னு.... இல்லைனா, "நான் எக்ஸாம் எழுதல" னு சொல்லிட்டு வெளில வந்து என்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தான னு சொன்னேன். ஆனா, இந்த ரெண்டு பதில் ல எத அவன் சொல்லிருந்தாலும், "திமிர பாரேன்... இந்த வயசுலயே" னு தான் சொல்லிருப்பாங்க.... "அப்பா அம்மா எப்படி வளத்துருக்காங்க பாரு" னு சொல்லிருப்பாங்க ( பல முறை, எங்க ரெண்டு பேருக்கும் குழந்தையை எப்படி வளக்கணும் னு லாம், ரொம்ப பேரு பாடம் நடத்திருக்காங்க). ரொம்பவே feel பண்ணிட்டான்.... இடது கைய யூஸ் பண்றது அவ்வளவு தப்பா னு, ரொம்பவே feel பண்ணிட்டான்.
             நாங்க, அவனோட இடது கை பழக்கம், எவ்வளவு பெருமையான விசயம்.... சமுதாயத்துல ரொம்ப கம்மியான ஆள்களுக்குத்தான் இடது கை பழக்கம் இருக்கும்.....அப்டி இருக்குறவங்க எவ்வளவு தனித்திறமைகளை (முகிலன், ஓவியம் நல்லா வரைவான் (https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16425952_1299331273438676_1291734299210777393_n.jpg?oh=1df8f385f03d7c6b27168b5dad069778&oe=5A0CB4B6) (http://epaperbeta.timesofindia.com/Gallery.aspx?eid=31807&id=07_02_2017_104_074_005&type=P&artUrl=WHEN-NOVICES-AND-EXPERTS-SHARED-THE-SAME-PLATFORM-07022017104074).... நல்லா புத்தகம் வாசிப்பான்.... நெறய கேள்விகள் கேப்பான்....) வச்சுருப்பாங்க..... நம்ம சொந்தகாரங்க, எங்களோட friends லாம் உன்ன பத்தி... உன்னோட lefthand  யூசேஜ் பத்தி எவளோ நல்லா பேசுறாங்க.... இடது கை பழக்கம்  உன்னோட குறை இல்லை, உன்னோட பலம்.... அந்த ஹோட்டல் ஓனர் நாம யோசிக்கிற மாதிரி யோசிச்சிருக்க மாட்டாரு.... அவருக்கு யாரும் அப்படி சொல்லிருக்க மாட்டாங்க... இல்லைனா, இதுதான் சீப் ஆ இருந்துருக்கும்... அதுனால வியாபார நோக்கத்துல அப்டி செஞ்சுருப்பாரு .....னு சொல்லி அவனை தேத்துனோம். 
              அப்புறமா, நான் சங்கீதா ட்ட...." அவன் கேட்ட கேள்விக்கு, நீ "ஆமா டா முகி... நீ சொல்றது சரிதான்... கஷ்டமா தான் இருக்கும் ல....? நாம இதுக்கு ஏதாவது செய்யணும் டா... நாம ட்ரை பண்ணுவோம்" னு அமைதியா  சொல்லிருக்கணும் னு அவன் எதிர்பார்த்திருக்கான் னு சொன்னேன். சங்கீதா சொன்ன பதில்லையும் குறை இல்லை... இப்படியே நாம அவன் feel  பண்றத சப்போர்ட் பண்ணி தடவிக் கொடுத்துட்டே இருந்தோம்னா, அவன் எப்படி சூழலை புரிஞ்சு நடக்க பழகுவான் னு அப்டி ஒரு பதிலை சொல்லிருக்கா. 
              இந்த சம்பவம் மூலம் கிடைத்த பாடங்கள்  ரெண்டு : 
1. சிறு பிள்ளைகளையும் அவர்களின் கேள்விகளையும் கையாள்வதில் பெருங்கவனம் செலுத்த வேண்டும் (சிறு பிசகும், பெருங்கவலை யைத் தந்துவிடும்). 
2. பொது இடங்களில், அனைவரும் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - எங்க வீட்டுல, எல்லா குழாய்கள்லையும் நடுவுல தான் திருகு இருக்கு... எல்லாரும் சிரமம் இல்லாம பயன்படுத்துற மாதிரி..... (அந்த ஹோட்டல் ஓனர் ட்ட போயி பேசலாம் னு இருக்கோம்).