24 நவம்பர் 2013

நுரை படுத்தும் பாடு

 
"நுரை" ங்கற  ஒரு விசயம், எப்படிலாம் சந்தோஷ படுத்துது பாருங்களேன். கொஞ்சம் ஆழமா யோசிச்சு பாத்தோம்னா, நுரை, நம்மள சின்ன வயசுல இருந்தே குதூகலப் படுத்திக்கிட்டே தான் இருக்குது. திருவிழாவுக்கு போகும்  போது கூட, நுரையாய் இருக்கும் சோப்பு தண்ணிய வாங்கி முட்டை விடுறதுல நமக்கு ஒரு ஆர்வம் இருக்கத்தானே செஞ்சுச்சு. பால் பொங்கி நுரையா வரும் போது  ஒரு சந்தோசம்..... நல்லா ஆத்துன மோர் ல மேல நுரை இருக்கும்... அதை குடிக்கும் பொது ஒரு மகிழ்ச்சி..... சின்ன குழந்தைகளுக்கு, பால், காபி. டீ இல்லேன்னா வேற ஏதாவது பானங்கள் குடுக்கும் போது நுரையோட குடுதோம்னா ஒரு குதூகலத்தோட அத குடுச்சுட்டு அதுனால ஓதட்டு மேல வர்ற மீசைய நம்மகிட்ட காட்டி பயமுருத்துவாங்கள்ள......அது ஒரு ஆனந்தம். மகிழ்ச்சியான எல்லா நேரங்கள்ளையும் நுரை ஒரு அங்கமாவே இருக்கு பாருங்களேன். பிறந்த நாள் விழாக்கல்ல இப்போ நுரை அடிச்சு விளையாட ஆரம்பிச்சுட்டோம்ல?  குளிர்பானங்கள் நுரையோடு திறக்கபடுவதைத் தானே நாம் எதிர்பார்க்கிறோம். வெற்றியையும், சந்தோசத்தையும் பகிர்ந்துகொள்ளும் எல்லா தருணங்களிலும் நுரை பொங்கும் பீர் பாட்டில் களுக்குதானே போட்டா போட்டி நடக்குது.

     
             சோப்பு போடும் போது நுரை வரலைன்னு வச்சுகோங்க, குளிச்ச திருப்தியே வராதுல. தலைல ஷாம்பூ போடும் போது நுரை வரலைன்னு வச்சுகோங்க, ஒரு நிம்மதியே வராதுல. முகச் சவரம் செய்யும் போதும் நுரை தேவப் படுதுல. பல்லு வெலக்கும்போது வாயில நுரை வரணும்ல (இது அந்த நுரை இல்லைங்க. பேஸ்ட்டு  நுரை.).
             ஆக, நுரை ங்கற  ஒரு விசயம் நம்ம வாழ்க்கையில மகிழ்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாவே ஆகிருச்சு பாருங்களேன். 
              இந்த ஒரு விசயத்ததாங்க, எல்லா தயாரிப்பாளர்களும் (சோப்பு, ஷாம்பூ  கிரீம், பானங்கள் மற்றும் இதர பொருள்கள் தயாரிக்கும்) பயன்படுத்திகிட்டாங்க. ரசாயனப் பொருள்கள பயன்படுத்தி தயாரிக்கிற எல்லாத்தையும் நம்ம கிட்ட பயன்படுத்த சொல்லி விளம்பரப்  படுத்துறாங்க. நாமளும், தலைக்கு சிகைக்காயயையும் , உடம்புக்கு மூலிகைப் பொடியையும், பல்லுக்கு சூரனத்தையும் விட்டுட்டு, சோப்பையும், ஷாம்பூவையும், டூத் பேஸ்ட்டையும் தூக்கிகிட்டு ஆரோக்கியத்த அம்போன்னு விட்டுட்டு அலையுறோம். நமக்கு என்னமோ நம்ம கவுரவம், நம்ம பெருமை தான முக்கியம்......
             ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருதுங்க : பெருமைக்கு, ஒருத்தன் என்னமோ பண்ணுனானாம்.....
                   .இதெல்லாம் அழிவுக்குத்தான்.

16 நவம்பர் 2013

டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............

மூத்தோர்களை/வயதானவர்களை/வயோதிகர்களை எடுத்தெறிந்து பேசும்/ மரியாதை குறைவாக நடத்தும் எந்த சமூகமும்/சமுதாயமும்/யாரும் வாழ்வில் முன்னேற்றத்தை காண்பது அரிதே.... அவர்களின்  சந்தோசத்தில், அப்படி என்ன நமக்கு கவலை?  அவர்கள் சந்தோசமாய் இருந்தால் நாம் எதற்கு கவலை கொள்ள வேண்டும்? உடனே, நமக்கு மற்றுமொரு கேள்வி எழலாம்: நம்மை கவலையில் ஆழ்த்தும் அளவுக்கு அவர்களின் சந்தோச நடவடிக்கைகள் இருந்தால், நாம் என்னதான் செய்வது....? அப்படி ஒருவர் நடந்து கொண்டால், அவரை வயதானவராகவோ, முதியவராகவோ, வயோதிகராகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள், மனிதனாக மட்டும் கருதுங்கள். மனிதனை மதியுங்கள்.
          சக மனிதனின் / மனுசியின் உணர்வுகளை புரிந்து கொள்ள, குறைந்த பட்சம் முயற்சியாவது எடுப்போமே.
            நண்பர்களே, நண்பிகளே, தோழர்களே, தோழிகளே, உறவுகளே... முன் எப்போதோ முகநூலில் படித்த ஒரு பதிவுதான்  ஞாபகத்திற்கு வருகிறது.
                   "மனதில் பட்டதையெல்லாம் பேசி (செய்து) விடாதிர்கள். சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்." அவ்வாறு பிரிந்து செல்பவர்கள், நம் அன்புக்கு உரியவர்களாய் இருந்தால்......?
                      தோழர்களே, தோழிகளே, உறவுகளே ஆணவம் அகற்றி, அகங்காரம் அழித்து, வெறியை தணித்து அன்பு செய்ய கற்றுக் கொள்வோம்.
         ரொம்ப சிம்பிளா சொன்னா......... "இன்னைக்கு செத்தா, இன்னைக்கே பாலு...." அப்பால எதுக்குப்பா இந்த ஆணவம், அகங்காரம், அகந்தையெல்லாம்.......என்னமோ போங்கப்பா.... பூமாதேவி சிரிக்கபோரா எல்லாரும் உள்ள போக போறோம்..........டண்டணக்கா.......ஹே.......டணக்குணக்கா.............




16 அக்டோபர் 2013

கோவில்பட்டியில் மீண்டும் கோடை...

கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்  " ஒரு நிரந்தர கோடையை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது" . கடந்த சில வருடங்களாகவே இப்பகுதியில் தேவையான அளவு மழை பெய்யவில்லை. நிலத்தடி நீர் மட்டம் மிக அதிகமான அளவுகுறைந்து கடுமையான தண்ணீர் பஞ்சம் வந்துவிடுமோ என்ற  ஒருவிதமான அச்சம் எங்கள் அனைவரின் மனதிலும் வந்துவிட்டது. இருக்கும் தண்ணீரையும் எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வும் இல்லை.
           இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் "வட கிழக்குப் பருவ மழை" யும் பொய்த்துவிடும் பட்சத்தில் நிச்சயமான ஒரு பஞ்சத்தை நாங்கள் சந்திப்போம் என்பது உறுதி.
            எங்களோடு சேர்ந்து நீங்களும் பிரார்த்தியுங்கள்... மழை க்காகவும், தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு க்காகவும்.
                                     வறண்ட மனதோடு....மழையை எதிர்நோக்கி........

17 செப்டம்பர் 2012

நம் சுகமா... குழந்தைகளின் வாழ்க்கையா.... எது முக்கியம்?


                 கடந்த வாரத்தில், எங்கள் ஏரியாவில் உள்ள ஒரு கடையில் நடந்த சம்பவம். ஒரு தந்தை தன்  மகளுடன் (6 அல்லது 7 வயதிருக்கும்) கடைக்கு வந்து அவருக்கு 3 சிகரெட்டுகளும் அவரின் மகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கினார். அதற்கான பணத்தையும் தந்தார். கடைக்காரர்  பொருள்களுக்கான விலை போக மீதம் காசை அவரிடம் தரும்போது, அவர் மீண்டும் கடைக்காரரிடம்,  ஒரு பால் பாக்கெட் தருமாறு கேட்டார். கடைக்காரர் இன்னும் ஒரு 8 ரூபாய் வேண்டுமென்று சொன்னார். அதற்க்கு அவர், எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பிறகு தருகிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கடைக்காரர், கொடுத்த பால் பாக்கெட்டைத்  திரும்பவும் வாங்கிகொண்டு, ஏற்கனவே நிறைய பாக்கி இருக்கிறது... அதைக் கொடுத்துவிட்டு பிறகு புதிய கடன் வாங்கிகொள் என்றார். இந்தப் பேச்சுவார்த்தை  நடந்துகொண்டிருக்கும்போது, கடையில் மேலும் சிலரும் இருந்தனர்.
      அந்த தந்தை உடனே அவரின் மகளிடம் "நீ நாளை இந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி கொள்ளேன் இன்றைக்கு நாம் பால் பாக்கெட் வாங்கிகொள்வோம்" என்றார். அந்தக் குழந்தை, "இந்த பிஸ்கட் பாக்கெட்  எவ்வளவு?' என்று கேட்டது. அவர் "20 ருபாய்" என்று கூறி அந்த பிஸ்கட் பாக்கெட்டை கேட்டுக் கொண்டிருந்தார்.  அதே நேரத்தில் கடைக்காரரையும் திட்ட ஆரம்பித்து விட்டிருந்தார். இதற்கிடையில், அந்தக் குழந்தை பிஸ்கட் பாக்கட்டை பிரித்து விட்டிருந்தது. அவரின் கோபம் இன்னும் அதிகமாகியது - இரண்டு விசயங்களுக்காக - ஒன்று, பிஸ்கட் பாக்கட்டை கொடுத்து பால் பாக்கட் வாங்க முடியாமைக்காக... இரண்டு, பல பேர் முன்னால்  தான் கடனுக்காக அவமானப் படுத்தப்பட்டதர்காக.
        எனக்கு அவரின் கோபத்தின் மேல் கரிசனம் ஏற்படவில்லை. ஏனென்றால், அந்தக் குழந்தையிடம் இருந்த ஒரு பிஸ்கட் பாக்கட்டை  வாங்குவதற்குப்  பதிலாக அவரிடம் இருந்த மூன்று சிகரெட்டுகளில் இரண்டை கொடுத்து அந்த பால் பாக்கெட்டை வாங்கியிருக்கலாம். என்ன ஒரு எண்ணம் பாருங்களேன், நமது சுகம் நமக்கு அதி முக்கியமாக இருக்கிரத்து. ஒரு குழந்தையின் தேவை நமக்கு இரண்டாம் பட்சம் அல்லது மூன்றாம் பட்சமாகத்தான் இருக்கிறது.
        மற்றும் ஒரு நிகழ்வு, ஒரு  சாலை விபத்து. அந்த மோட்டார் பைக்கில் அந்த சிறுவனையும் (6 அல்லது 7 வயதிருக்கும்) சேர்த்து மூவர். ஒருவர் அச் சிறுவனின் தந்தை, மற்றொருவர் அவனின் தாத்தா. சிறுவனைத் தவிர அவர்கள் இருவரும் மது அருந்தியிருந்தனர். வாகனத்தை ஒட்டி வந்தவரின் சட்டையை சாலையோரத்தில் இருந்த  முள் செடி பிடித்து இழுத்து விட, நிலை தடுமாறி, கட்டுப்பாடை  இழந்து வண்டியோடு கீழே விழுந்துவிட்டனர். நல்ல வேலையாக, மூவருக்கும் உயிர் ஆபத்து இல்லை. ஆனால், இதில் கவனித்துப் பாருங்கள், குடிப்பதே ஒரு கெட்ட  செயல். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தேவையற்ற செயல், அதிலும் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது கேவலமான கேடு கெட்ட  செயல் அல்லவா. இங்கும், நமது சுகமும் தேவையும் தான் பிரதானமாகப் படுகிறதே அன்றி, குழந்தைகளின் தேவைகளும், விருப்பங்களும், உயிரும் நமக்கு இரண்டாம் பட்சம் அல்லது மூன்றாம் பட்சமாகவே தெரிகிறது.
        எங்கே செல்கிறது உலகம்......?

22 மார்ச் 2012

அம்மா வாழ்க! கழகம் வளர்க! - 3

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து, நேற்று காலை வரை எங்க ஏரியால (கோவில்பட்டி - சாலைபுதூர் - இ பி காலனி) கரண்ட்டு கட்டே இல்ல (தேர்தல் முடிவு அறிவிச்ச உடனே எங்களுக்கும்வச்சாங்க ஆப்பு ). நாங்கல்லாம் என்ன நெனச்சோம்னா, +2 பரீச்சை ஆரம்பிசுருச்சுல அதுனால கரண்ட்ட கட் பண்ணலன்னு. ஆனா, அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, கோவில்பட்டி ஊருக்குள்ள எப்பவும் போல பவர் கட் இருக்குதுன்னு. பெறகு, என்ன ஏதுன்னு விசாரிச்சு பாத்தா, எங்க ஏரியால தான் நம் தமிழகத்தின் மாண்புமிகு அமைச்சர்கள்ள பாதி பேரு தங்கி இருக்காங்கன்னு தெரிஞ்சது. இப்படி இருந்தா பெறகு ஏன் எங்க ஏரியால கரண்ட் கட் ஆகுது? கரண்ட கட் பண்ணா அந்த ஏரியா இ.பி. ஆபிசர எங்க அமைச்சர் .......அடிச்சுர மாட்டாரு...?
இப்பதான், நமக்கு ஒரு யோசனை தோணுது, இடைதேர்தல் நடந்தா அந்த தொகுதிக்கு உட்பட்ட ஏரியாக்கள்ல கரண்ட் கட் இல்லாம பாத்துகுராங்கல்ல, அப்பன்னா, எல்லா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தா எல்லா தொகுதிக்கும் உட்பட்ட பகுதிகள்ல மின்சாரம் தடை இல்லாம கிடைக்கும்ல - நம்ம மாநிலத்தின் எல்லா அமைச்சர்களும் அந்த தொகுதிகள்ல இருப்பாங்கல்ல.
ஒருவேளை, இப்படி பண்ணுனா அமைச்சர்களுக்கு துறை சார்ந்த வேலைகள கவனிக்க முடியாம போயிருமேன்னு, ஒரு கவலை புதுசா தோணுச்சுனா.... நாம இடைத் தேர்தல் துறைன்னு ஒரு துறைய புதுசா உருவாக்கி, அந்த துறைக்கு ஒரு 30 பேர அமைச்சர்களா ஆக்கிட்டோம்னா, அவுங்க பாட்டுக்கு இடைத் தேர்தல் சம்பந்தமான எல்லா வேலைகளையும் கவனிச்சுகிருவாங்க. நம்ம அம்மாதான்எப்பவுமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் . அம்மா வாழ்க! கழகம் வளர்க!

08 மார்ச் 2012

அம்மா வாழ்க! கழகம் வளர்க! - 2

நேத்து நைட்டு 10 மணிக்கு மேல கரண்ட்டு கட் ஆகல. ரொம்ப சந்தோசம். காலைலயும் 6 மணிக்கு கரண்ட்டு கட் ஆகல.ரொம்ப ரொம்ப சந்தோசம். ஆனா பயமும் கூட சேந்துகிருச்சு. மொத்தமா ரெண்டு நாளைக்கு கரண்ட் இல்லாம செஞ்சுட்டாங்கனா.... அம்மா புண்ணியத்துல ஏதோ கொஞ்சம் நஞ்சம் கெடைக்குது..... அப்புறந்தான் தெரிஞ்சது, இன்னைக்கு +2 பரீட்சை ஆரம்பிக்குதாம். அம்மாதான் கல்விக்கு முக்கியத்துவம் குடுக்குற கடவுளோட மற்றொரு அவதாரம்ல (சூ சூ......அண்ணா நூற்றாண்டு நூலகத்த மாத்துனத, சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிச்சதெல்லாம் அப்போ, இது இப்போ.) அதுனால, பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாதுங்குறதுக்காக கரண்ட்ட கட் பண்ணல. வருஷம் 365 நாளும் +2 பரிட்ச்சை நடந்தா எப்படி இருக்கும்....? அம்மா வாழ்க! கழகம் வளர்க!

அம்மா வாழ்க! கழகம் வளர்க! - 1

வீட்ல கேஸ் சிலிண்டரும் தீந்துருச்சு, இண்டக்சன் ஸ்டவ் பயன்படுத்துறதுக்கு கரண்ட்டும் இல்ல. முந்தா நாள், பிள்ளைங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போகல. ஏன்னா, வீட்ல சமையல் பண்ணல....
எல்லாரும் சத்தமா சொல்லுங்க " அம்மா வாழ்க! கழகம் வளர்க!"