05 நவம்பர் 2016

இணையாமலே இணைந்து.... பிரியாமலே பிரிந்து...

04.11.2001 லிருந்து
இரு ஏழரை ஆண்டுகள்.....
இணைந்தே இருந்திருந்திருக்கின்றோம்...

நீயும் நானும்
என்னாலும் உன்னாலும்
பலமுறை
பயந்திருக்கின்றோம்.

உன் வங்கியில்
என் வார்த்தைகளும்
என் வங்கியில்
உன் வார்த்தைகளும்
வைப்பு நிதியில் உள்ளன.... நிறையவே.

எனக்கு இது பிடிக்குமென
நீ இப்படியும்
உனக்கு அது பிடிக்குமென
நான் அப்படியும்
இருந்திருக்கின்றோம்.
இதுவும் அதுவும் பிடிக்காமலே.

நம் இருவருக்கான விளையாட்டுகளில்
நீ தோற்று என்னையும்
நான் தோற்று உன்னையும்
ஜெயிக்க வைத்திருக்கின்றோம்.

உன் பகலில் நானும்
என் பகலில் நீயும்
இருளைப் பாய்ச்சியிருக்கின்றோம்.

உன் சூரியன் என்னையும்
என் சூரியன் உன்னையும்
பொசுக்கியிருக்கின்றன.

மெய்ப்பட வேண்டிய கனவுகள்
உனக்கும் எனக்கும்
இன்னும் உள்ளன.

நம்
பல நொடிகள்
யுகங்களாய் கடந்திருக்கின்றன.

இணையாமலே இணைந்திருந்திருக்கின்றோம்.
பிரியாமலே பிரிந்திருந்திருக்கின்றோம்.

ஆயினும்
இணைந்தேயிருக்கின்றோம்... இன்னும்.

நாம்
காதலித்தா இணைந்தோம்?
இணைந்ததால் காதலித்தோம்.

காதலா நம்மை மணக்கச் செய்தது?
மணம்தான் நம்மைக் காதலிக்கச் செய்தது.

ஆதலினால்
காதல் செய்வோம்... இனியும்.

காதல் கயிற்றின்
இறுக்கம் தளராதிருக்கட்டும்.
நம் மண வாழ்வின்
இந்த 16ஆம் ஆண்டிலும். (04.11.2016)

உனக்கு நானும்
எனக்கு நீயும்
வாழ்வோம்.... காதலாய்... காதலுடன்😍😍😍

#சங்கீமாகாதல் #திருமணநாள்

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

GOOD WISHES

theerppavan சொன்னது…

நன்றி☺