20 நவம்பர் 2016

கருமை to வெண்மை ...... வெறுமை to பசுமை.

ஒரு வியாபார நிறுவனத்தின் அறிவிப்புப் பலகையில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது :         1. இவ்விடம் நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு கண்டிப்பாக அரசு அங்கீகாரம் பெற்ற விலை சிட்டை வழங்கப்படும்.
2. கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், துணிப்பை கொண்டு வந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. உங்கள் வீட்டில் உள்ள பாலித்தீன் பைகளை எங்களிடம் தந்து, நீங்கள் வாங்கும் பொருள்களுக்குச் சிறப்புச் சலுகையைப் பெறுங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்படி ஒரு கடை இருந்தா எப்படி இருக்கும்....😇😇😇😇😇😇😇                                  

05 நவம்பர் 2016

இணையாமலே இணைந்து.... பிரியாமலே பிரிந்து...

04.11.2001 லிருந்து
இரு ஏழரை ஆண்டுகள்.....
இணைந்தே இருந்திருந்திருக்கின்றோம்...

நீயும் நானும்
என்னாலும் உன்னாலும்
பலமுறை
பயந்திருக்கின்றோம்.

உன் வங்கியில்
என் வார்த்தைகளும்
என் வங்கியில்
உன் வார்த்தைகளும்
வைப்பு நிதியில் உள்ளன.... நிறையவே.

எனக்கு இது பிடிக்குமென
நீ இப்படியும்
உனக்கு அது பிடிக்குமென
நான் அப்படியும்
இருந்திருக்கின்றோம்.
இதுவும் அதுவும் பிடிக்காமலே.

நம் இருவருக்கான விளையாட்டுகளில்
நீ தோற்று என்னையும்
நான் தோற்று உன்னையும்
ஜெயிக்க வைத்திருக்கின்றோம்.

உன் பகலில் நானும்
என் பகலில் நீயும்
இருளைப் பாய்ச்சியிருக்கின்றோம்.

உன் சூரியன் என்னையும்
என் சூரியன் உன்னையும்
பொசுக்கியிருக்கின்றன.

மெய்ப்பட வேண்டிய கனவுகள்
உனக்கும் எனக்கும்
இன்னும் உள்ளன.

நம்
பல நொடிகள்
யுகங்களாய் கடந்திருக்கின்றன.

இணையாமலே இணைந்திருந்திருக்கின்றோம்.
பிரியாமலே பிரிந்திருந்திருக்கின்றோம்.

ஆயினும்
இணைந்தேயிருக்கின்றோம்... இன்னும்.

நாம்
காதலித்தா இணைந்தோம்?
இணைந்ததால் காதலித்தோம்.

காதலா நம்மை மணக்கச் செய்தது?
மணம்தான் நம்மைக் காதலிக்கச் செய்தது.

ஆதலினால்
காதல் செய்வோம்... இனியும்.

காதல் கயிற்றின்
இறுக்கம் தளராதிருக்கட்டும்.
நம் மண வாழ்வின்
இந்த 16ஆம் ஆண்டிலும். (04.11.2016)

உனக்கு நானும்
எனக்கு நீயும்
வாழ்வோம்.... காதலாய்... காதலுடன்😍😍😍

#சங்கீமாகாதல் #திருமணநாள்

10 அக்டோபர் 2016

பூரியும்... இட்லியும்.... மனசும்...

பூரி ஆர்டர் பண்ணிட்டு இலைல தண்ணி தெளிச்சுட்டு காத்துகிட்டு இருக்கும் போது.... பக்கத்து இலைக்கு சூடா ஆவி பறக்க வெள்ளையா வர்ற இட்லியை நாமளும் ஆர்டர் பண்ணிருக்கலாமோ னு தோணுது.... என்ன மனசுடா இது....
#சாப்பாடு #சாப்பாடு #சாப்பாடுமட்டும்....

22 ஆகஸ்ட் 2016

குழந்தைகளாவே இருக்கட்டும்.


பெரியவிங்க லாம் குழந்தையா மாறணும்னு ஆசைப்படறப்போ, குழந்தைகளை மட்டும் பெரியவிங்க மாதிரி ரொம்ப டீசென்டா , அப்டியே புரோபோசனலா, இன்னும் எப்டிலாம் குழந்தை இருக்க வேண்டியதில்லையோ அப்டிலாம் இருக்கணும்னு நினைக்கிறது, கொஞ்சம் ஓவர் தான். ஒருமுறை, என்னோட மகனோட ஸ்கூலுக்கு PTM கு போயிருந்தேன். அங்க அவனைப் பத்தி "ரொம்ப ஜென்டில்... ரொம்ப டீசண்ட்"...னுலாம்  சொன்னாங்க. எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு..... கேட்டுட்டேன்...... அவன் கிளாஸ் ல எல்லார்ட்டையும் பேசுறானா, உங்கள்ட லாம் பேசுறானா, ஏதாவது சின்ன சின்ன சேட்டை பன்றானா னுலாம்  கேட்டுட்டேன். இந்த வயசுல எல்லார்ட்டையும் பேசி, சின்ன சின்ன சண்டை போட்டு சந்தோசமா இருக்க வேண்டியதுதானே.... இதை செய்ய  விடலைனா, இல்லைனா நம்ம குழந்தை அப்டி இல்லைனா எங்கையோ தப்பு நடக்குதுன்னு அர்த்தம். கவனிக்கணும்.
    இன்னொரு விஷயம், இதுல இந்த சமுதாயம் ங்கிற 4 பேரு இருக்காய்ங்க பாரு.... அவிங்கள சமாளிக்கணும். இவிங்க எங்கனாலும் இருப்பாய்ங்க.... நம்ம கூடவே இருப்பாய்ங்க..... நம்மள சுத்தி இருப்பாய்ங்க..... இவிங்களோட கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும், பார்வைகளுக்கும் நாம பதில் சொல்லணும்.
    குழந்தைகளை, குழந்தைகளாவே விட்டுர்ரதுதான் எல்லாருக்கும் ரொம்ப நல்லது. 

18 ஆகஸ்ட் 2016

கொடுப்போம்....பெறுவோம்....

 கொடுப்பதிலும் பெறுவதிலும் தான்
நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.













எதைக் கொடுக்கிறோம்.... எதைப் பெறுகிறோம்
என்பதில்தான்
வாழ்வின் ரகசியமும் சுவாரஸ்யமும்
அடங்கி இருக்கிறது.
















உண்மையைக் கொடுப்போம்
உள்ளன்பைப் பெறுவோம்.









அன்பைக் கொடுப்போம்
பேரன்பைப் பெறுவோம்.


















பூக்களைக் கொடுப்போம்
புன்னகைகளைப் பெறுவோம்.

30 ஜூலை 2016

மறக்க விடுவதேயில்லை

மறந்தது போல் நான் சென்றாலும்
நீ என்னை மறக்க விடுவதேயில்லை!!!

30 ஜூன் 2016

தலைக்கவசம

Image result for helmetமறந்து செல்லவில்லை.
                                                                மறந்தது போல் சென்று விடுகிறேன்.


29 ஜூன் 2016

வந்து செல்கிறேன்

இப்பொழுதெல்லாம்
நான் எப்படியும்
எதிர்பார்ப்பதில்லை...
அப்படியே வந்து செல்கிறேன்.

09 மே 2016

கோவில்பட்டி, சத்யபாமா தியேட்டர்

                 இன்று, சூர்யாவின் "24" திரைப்படம் பார்க்க போயிருந்தோம். கோவில்பட்டி, சத்யபாமா தியேட்டர். படம் நல்லா இருந்ததுங்க்ரதையும் தாண்டி, கோவில்பட்டில இந்த மாதிரி தியேட்டர்ல படம் பாக்குறது ஒரு தனி அனுபவம்தான். என்னோட இதே மாதிரியான முந்தைய அனுபவங்கள்  மாதிரியே இந்த அனுபவுமும். குடும்பத்தோட இந்த மாதிரி தியேட்டர்களுக்குப்  படம் பாக்க போறதா விட, வீட்டுல திருட்டு டி வி டி வாங்கி குடும்பமா உக்காந்து பாத்துரலாம். படத்தப் பாக்கவா, இவிங்கள பாக்கவா..........? முடியல....... தியேட்டர்ல, உள்ள உக்காந்து தம் அடிக்கக் கூடாதுன்னு, தம் அடிக்கிறவனுக்குத் தெரியாதா என்ன.....? தெரிஞ்சும் அடிச்சான்னா, அவன் ஒரு முடிவோடதான இருக்கான்னு அர்த்தம். பின்ன அவன்ட போயி நாம "அண்ணே, கொஞ்சம் வெளிய போயி தம் அடிங்கண்ணே" னு  சொன்னா, நம்மள படத்துல வர்ற சூர்யா பாத்து வில்லன்ஸ் லாம்  பயந்து போறமாதிரி பாத்து  "சரிங்க" னா  சொல்லுவான்...? படத்துல வர்ற காமெடியனுக்கு ஏழாவது எட்டாவது ப்ரண்டா வர்ற ஒருத்தன மாதிரி  பாத்து, வேலைய பாத்துட்டு போடா னு  சொல்ல மாட்டான்....?  அதக் கேட்டு கோபம் பொத்துகிட்டு வந்து அவன அடிக்கிறதுக்கு நான் என்ன சூர்யா வா.... இல்ல, விஜய் யா..... இல்ல தனுஷ் ஆ....இல்லைனா வேற ஏதாவது ஹீரோ வா....
               சரி, இவிங்கள  கேக்குறதுக்குதான்  நமக்கு உதறல் எடுக்குது...., தியேட்டர் ஓனர் ட  சொல்லுவோம்னு சொன்னா..... "என்ன சார் பண்றது, நாங்களும் ஸ்லைட் போடத்தான் செய்யுறோம்..... ஆனா இவிங்க நிப்பாட்ட மாட்டறாங்க னு  சொல்லிட்டு, திரும்பவும் ஸ்லைட் போடுறோம் சார்" னு  சொனாங்க..... பாவம் அவிங்களும் நம்மள மாதிரிதான் போல.  
               அடப் போங்கப்பா..... திருட்டு டி வி டி வாங்கவும் மனசு வரல...... ஊருக்குள்ள நல்ல தியேட்டரும் இல்ல.... 120 ரூவா குடுத்து ஒரு பயத்தோடையே  படத்தப்  பாக்க வேண்டியிருக்குது...... என்ன பொழப்புடா சாமி........ ஊருக்குள்ள நிம்மதியா குடுத்த பணத்துக்கு, சந்தோசமா ஒரு படத்தப் பாக்க முடியல...

01 மே 2016

ஆஹா ஓஹோ...

"ஆஹா ஓஹோ..." விசயமோ, "அட்டு" விசயமோ....அது தனிப்பட்ட என்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட உன்னைப் பொறுத்தோ அல்லது தனிப்பட்ட வேறு எவரையோ பொறுத்தோதானே இருக்க  முடியும். ஒரு விஷயத்தை பெரிதாக்குவதும், சிரிதாக்குவதும் கூட தனிப்பட்ட ஒருவரின் பார்வையில் தானே இருக்க முடியும். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதும், தள்ளி ஒதுக்குவதும், சில வேலைகளில் அந்த தனிப்பட்டவரின் திறமையிலும், பல நேரங்களில் விசயத்தின் வீரியத்திலும் இருக்க முடியும்.  மேலும், உண்மையை விளம்புவர்கள் மீதும்,  நம் கருத்துக்கு மாற்று கருத்துக் கூறுபவர்கள் மீதும் இயல்பாகவே வஞ்சமும் வன்மமும் வர அதிக வாய்ப்புள்ளது தானே....கண்டிப்பாக, மேதாவித் தனம் நம்மை சில இடங்களில் கோமாளியாகத்தான் ஆக்கிவிடும்.....
           

23 ஏப்ரல் 2016

செல்லம்மா

இறுதியில், உன் இதழ் பதியுமானால்.... நான் எத்தனை முறை வேண்டுமானாலும் என் கன்னத்தை உன் கரங்களுக்குத் தருவேன். 

22 ஏப்ரல் 2016

நான் பார்த்துக்கொண்டிருக்கும் நீ, உண்மையில் நீயே இல்லை...

03 ஏப்ரல் 2016

நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் நான், உண்மையில் நானே இல்லை....




19 பிப்ரவரி 2016

என்னைத் தவிர

எனக்குப் பிடித்த எதுவுமே
உனக்குப் பிடிப்பதில்லை.

 என்னைத் தவிர.

17 பிப்ரவரி 2016

எது பிடிக்கும்...?

எனக்கு அது பிடிக்குமென
நீ அப்படியும்,
உனக்கு இது பிடிக்குமென
நான் இப்படியும்
தயாராகிறோம்..... தினமும்.
எனது இதையும்
உனது அதையும்
அழித்துவிட்டு.




இருவருமே தோற்றுவிடுகிறோம்

நமது விளையாட்டில்
நீ தோற்பதில்
எனக்கொன்றும் உறுத்தலில்லை.
ஆனால்....
நீ, என்னையும் தோற்கடித்துவிடுகிறாய்....?

**********************************************

நம் இருவருக்கான இவ்விளையாட்டில்
நாம் இருவருமே தோற்றுவிடுகிறோம்.

**********************************************

நாம் இருவருமே தோற்றுவிட்டால்,
யார்தான் ஜெயிப்பது...?

**********************************************

என்னளவில் நீ தோற்றுத்தான் போகிறாய்....
வெற்றி அகச்சிரிப்போடு.

**********************************************



16 பிப்ரவரி 2016

பெயர் பதியா எண்ணிலிருந்து
வரும் அழைப்பிலெல்லாம்
நீ வருவாயென.....



13 ஜனவரி 2016

தனி ஒழுக்கம்,பொது ஒழுக்கம்.

தனி ஒழுக்கத்திற்கும், பொது ஒழுக்கத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது போல. தனியனாய் ஒழுக்க சீலனாய் இருக்கும் ஒருவன்(ள் ), கூட்டத்தில் ஒழுக்கத்தை ஓட்டியே விடுகிறான்(ள்). நேற்றிரவும் (12.01.2016) பார்த்தேன்.  ஒரு பெருங்கூட்டத்தை நிர்வகிப்பதும் ஒரு பெரிய கலையே. அதுவும், வெவ்வேறு வயது, வெவ்வேறு பழக்க வழக்கம் உடைய கூட்டத்தை நிர்வகிப்பது, உண்மையில் பெரிய வேலைதான். 

11 ஜனவரி 2016

காதலும் காதலிகளும்.

என் காலத்தின் பயணத்தில்,  காதலிகள் மாறிக்கொண்டே இருந்திருகின்றனர்.
காதல் மட்டும் மாறவே இல்லை.