03 அக்டோபர் 2015

நீ விழை... நான் விரும்புகிறேன்...

நீ விழை... நான் விரும்புகிறேன்...
மழை விழைந்தாய்.
தருவித்தேன்!
நனைந்து கொண்டே
வெயில் வேண்டினாய்.
மழை துரத்தி வெயில் கொணர்ந்தேன்!
வெயில் காய்ந்தே
தென்றல் தேடினாய்.
தேகம் சிலிர்க்க
தென்றல் தந்தேன்!
தென்றல் தவிர்த்து
வேகம் வேண்டி
புயல் கேட்டாய்.
தேகம் தடுமாற
திடுமென உரு மாற்றினேன்!
மின்னல் காண
விழிகள் விழித்தாய்.
கரங்கள் உரசி மின்னல் வெட்டினேன்!
மின்னல் ஒளியில்
இடியும் இரைந்தாய்.
இமயம் பிளந்து
இடி இசைத்தேன்!
நட்சத்திரங்கள் கோர்த்து
மாலை கேட்டாய்.
விண்ணை வீழ்த்தி
உன்னை நிறைத்தேன்!
இன்னும் இன்னும்...
நிறைய நிறைய....
வேண்டும் வேண்டும்
என்றாய்.
நானும்
திகட்டத் திகட்டத்
தந்தேன்.
என்னைத் தவிர.
நீயும் விழையவில்லை.
நானும் விரும்பவில்லை!!!

கருத்துகள் இல்லை: