நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு
நடுவே கனமானக் கயிறுஅந்தப் பக்கம் நீ
இந்தப் பக்கம் அவன்.
கயிறு மட்டத்திற்கு மேல்
ஒரு ஓரத்தில்
உங்களிருவரையும்
பார்க்கும் விதத்தில்
நடுவராகவும் பார்வையாளனாகவும்
நான்.
நீங்களிருவரும் அவ்வப்போது
ஒவ்வொருமாதிரி மாறிக் கொள்கிறீர்கள்
ஆனால்
எப்பொழுதும் அந்தக் கயிறு மட்டும்
உங்கள் நடுவே.
சில நேரம் நீங்களிருவரும்
கையிறை விட்டு விலகி
தனித் தனியே தூரமாய்
சென்றுவிடுகிறீர்கள்.
சில நேரம் நெருங்கி வருகிறீர்கள்.
புன்னகைகிரீர்கள்
சத்தமாய் சிரிக்கிறீர்கள்.
கனமான அந்தக் கயிறு
மெல்லிய நூலாகிறது.
இச் சந்தர்பத்தை
நீங்களிருவரும் மிகச் சரியாக
பயன்படுத்துகிறீர்கள்
தொட்டுக் கொள்கிறீர்கள்
தடவிக் கொள்கிறீர்கள்
மெய் மறக்கிறீர்கள்
திடீரென்று
ஏதோவொன்று உங்களைக்
கலவரப் படுத்துகிறது.
இருவரும்
முறைத்துக் கொள்கிறீர்கள்
உங்கள் பார்வை
பயமுறுத்துகிறது
கோபத்தோடு முனங்கத் தொடங்குகிறீர்கள்.
ஒருவரை ஒருவர் திட்டிக்கொல்கிரீர்கள்.
முகத்துக்கு நேரே விரல் நீட்டி
வெறுப்பை வார்த்தைகளாய்
கொட்டி தீர்க்கிறீர்கள்.
உங்கள் இருவர் மீதான
கோபம் ஒருவருக்கொருவர்
அதிகரிக்க அதிகரிக்க
கயிறு கல்லாய் மாறுகிறது.
கல் பாரையாகிறது
பெரிய கல் திரை
இப்போது உங்கள் நடுவில்.
இருவரும் ஒருவாறாய்
இருவரிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிரீர்கள்.
மீண்டும் தூரமாய் செல்கிறீர்கள்.
நான்
பார்த்து ரசிக்கிறேன்.
நடுவராய் சிந்திக்கிறேன்.
கல்திரை உங்களிருவரையும்
காத்து விட்டது.
நேரம் கடந்து செல்கிறது.
நெருங்குகிறீர்கள்
கல் திரையைத் தட்டுகிறீர்கள்.
இருபுறமும்
கல் திரை கரைகிறது.
கல் கரைந்து
திரையாகிறது.
அந்தக் கயிற்றைப்
போல் திரை
ஒருவரைஒருவர்
தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை.
நீங்கள் நிழல்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள்.
உன் மனதின் ஈரம்
கண்களிலும்.
அவன் மனதி பாசம்
கண்களிலும்.
திரையின் உயரம்
குறைகிறது.
திரை கயிராகிறது.
புன்னகைக்கிறீர்கள்
சத்தமாய் சிரிக்கிறீர்கள்.
நீங்களிருவரும் அவ்வப்போது
ஒவ்வொரு மாதிரி மாறிக் கொள்கிறீர்கள்.
ஆனால் எப்போதும்
கயிறு மட்டும் உங்கள் நடுவே.
சில நேரம் கயிறாய்
சில நேரம் மெல்லிய நூலை
சில நேரம் கல்லாய், கல் திரையை
சில நேரம் திரையாய்.
நான்
நீங்கள் புன்னகைக்கும் போது
பார்க்கிறேன்
சத்தமாய் சிரிக்கும் போது
கவனமாய் புன்னகைக்கிறேன்.
இருவரின்
கோபப் பார்வைகள் சந்திக்கும் போது
சற்றே நிதானிக்கிறேன்.
வெறுப்பு
வார்த்தைகளாகும் போது
பயத்துடன் குழம்பிப் போகிறேன்.
இருவரின்
அனைத்து அசைவுகளுக்கும்
நானும் அசைகிரேன்.
உன் அமைதி
அவனை சில நேரம்
அழுது புரண்டு ஆர்ப்பாட்டம்
செய்ய வைக்கிறது.
அப்படியே அவனுடையது
உன்னையும்.
புன்னகைக்கிறீர்கள்
சிரிக்கிறீர்கள்
அழுதுவிடுகிரீர்கள்
கோபப் பார்வை
பார்த்துக் கொள்கிறீர்கள்.
திட்டிக் கொள்கிறீர்கள்
தூரப் போகிறீர்கள்
திரும்ப வருகிறீர்கள்.
எது எப்படி நிகழ்ந்தாலும்,
நீ அவன் நான் மற்றும் அந்தக் கயிறு.