14 ஜூலை 2017

இடது கை பழக்கம், இளக்காரமா....?

இடது கை பழக்கம், இளக்காரமா....?
                 இன்று, நாங்கள் நால்வரும் (சங்கீதா, முகிலன், செந்திரு மற்றும் நான்) கோவில்பட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் கு சாப்பிட போயிருந்தோம். நான் 60 நொடிகளுக்கும் குறைவான தாமதத்தில் அவர்கள் மூவருக்கும் பின், உள் சென்றேன். அதற்குள், அவர்கள் மூவரும் கை கழுவிவிட்டு டேபிளில் அமர்ந்திருந்தனர். நான் டேபிளுக்கு வருவதற்கு முன்னரே முகிலனுக்கும் சங்கீதாவுக்கும் இடையில் வாஷ் பேசினில் இருக்கும் குழாயைப்  பற்றி, கோபம்  மற்றும் அதிருப்தியான முகங்களோடு ஒரு உரையாடல் நடந்துகொண்டிருந்தது. முகிலனிடமிருந்து வந்த, வாஷ்பேசினில் பொருத்தப்பட்டிருந்த குழாயை பற்றியக்  கேள்விக்கு சற்று அதிகமான (அக்கறையுள்ள) கோபத்தோடு சங்கீதாவிடமிருந்து  பதில் வந்துகொண்டிருந்தது. முகிலன் கண்களில் கண்ணீர் திரளத் தொடங்கியிருந்தது. பிரச்னை என்னவென்றால், இடது கை பழக்கமுள்ள முகிலனுக்கு அந்த ஹோட்டலில் இருந்த குழாய், அவனால், பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்த காரணத்தால், "இப்படியெல்லாம் (படத்தை பாருங்க) குழாய் யை வைத்தால் என்னை (முகிலனை) போன்றவர்களெல்லாம் எப்படி கை கழுவுவது" என்ற அவனளவில் நியாயமான கேள்வியை விரக்தியோடு எழுப்பிவிட்டது. 



                         இதற்கான பதிலாக சங்கீதாவிடமிருந்து "மெஜாரிட்டி எப்படி இருப்பாங்களோ அப்டித்தான் அவுங்களுக்காகத்தான் எல்லாத்தையும் வச்சிருப்பாங்க....இதுக்கெல்லாம் feel  பண்ணிட்டு இருக்காத.... அப்டி நமக்கு வேணும்னா, நாமதான் டிசைன் பண்ணனும்... நீ ட்ரை பண்ணு" னு வந்துருச்சு. இந்த பதில் முகிலனை ஹர்ட் பண்ணிருச்சு போல. அவன் கண்களை குளமாக்க , அவன் மனம் தயாராகிக் கொண்டிருந்தது.  "சரி விடு முகி... இதுக்கெல்லாம் feel  பண்ணாத" னு சொல்லி சாப்பிட்டு முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டோம். 
               வீட்டுக்கு வந்த பின்ன தான், சங்கீதாக்கு, முகிலன் முகம் ஏதோ சரியில்லாத மாதிரி இருக்கே னு தோணி, என்ன னு கேட்டா. முகிலனும் ஒண்ணும்  இல்ல...ஒண்ணும் இல்ல... னு முகத்த திருப்பிகிட்டே இருந்தான். அவனோட மனசு மெதுவா ஜெயிக்க ஆரம்பிச்சுருச்சு. அவனை தொட்டு மெதுவா பேசி, இதுக்கெல்லாம் கலங்க கூடாது... என்ன ஆச்சு னு கேக்கும் போதுதான் சொல்றான்... "நான் ஹோட்டல் ல, அந்த டேப் அ மாத்தணும் னா  சொன்னேன்?.... ஏன் இப்படிலாம் இருக்கு.... எல்லாரும் யூஸ்  பண்ற மாதிரி சென்டர் ல, குழாயோட திருகு இருந்துச்சுன்னா எல்லாருக்கும் usefull ஆ இருக்கும் னு தான சொன்னேன்....அதுக்கு ஏன் நீங்க அப்டி பதில் சொன்னிங்க" னு கேட்டான். அப்போதான் திரும்பவும் (இதுக்கு முன்னாடியே பல தடவை, மற்றவங்களோட புரியாமையும் அறியாமையும், முகிலனோட இடதுகை பழக்கத்தை ரொம்பவே காயப்படுத்திருக்கு) அவனோட கஷ்டம் எங்க ரெண்டு பேருக்கும் புரிஞ்சது. அவன்  சொல்றது சரிதான்னு புரிஞ்சது.
             முகிலனோட இடது கை பழக்கம் எப்படி னா.... நாம வலது கைல செய்ற எல்லா விசயத்தையும் அவன் இடது கைல செய்வான். நாம இடது கைல செய்ற எல்லா விசயத்தையும் ("எல்ல்ல்ல்லா விசயத்தையும்") அவன் வலது கைல செய்வான். ஆக, நமக்கு நல்ல கையான சோத்தாங்கை, அவனுக்குப் பீச்சாங்கை. நமக்கு கெட்ட கையான பீச்சாங்கை, அவனுக்கு சோத்தாங்கை. இப்டி இருக்கும் போது, சாப்பிட்டு முடிச்சுட்டு அவன் எப்டி சோத்துக் கையோட குழாய திருகுவான் (நீங்க இடது கைல சாப்பிடறவரா உங்கள நெனச்சுக்கிட்டு, சாப்பிட்டு முடிச்சுட்டு படத்துல இருக்குற குழாயில எப்படி கை கழுவுவீங்க னு யோசிச்சு பாருங்க..... சிரமமா இருக்கும்ல....)?
           இதுக்கும் அதிகமா லாம் அவனுக்கு நடந்துருக்கு.... பந்தியில, இல்லனா ஹோட்டல் ல, அவன்  சாப்பிட உக்காந்து இலைல அவனோட சோத்தாங்கைய வைப்பான்.... உடனே எங்க இருந்தோ  ஒரு குரல்  ரொம்பவே கலாச்சார, ஒழுக்க அக்கறையோடு ஒலிக்கும் "தம்பி... வலது கைல சாப்பிடு... அது என்ன அசிங்கமா இடது கைல சாப்பிடுற..." னு. சின்ன வயசுல அவனுக்கு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, எங்களை பாப்பான்... நாங்க அந்த குரலுக்கு விளக்க பதில் குடுத்துட்டு, நீ சாப்பிடு னு அவனை சாப்பிட வைப்போம். அவன் வயசு கூட கூட, இப்டி வர்ற குரல்கள் அவனுக்கு எரிச்சலை தர ஆரம்பிச்சு பொது இடங்கள்ல....குறிப்பா பந்தில உக்காந்து சாப்பிட்றத... ரொம்ப முக்கியமா, கோவில்கள் ல நடக்கும் பந்திகள் ல உக்காந்து சாப்பிடறது தவிர்க்க ஆரம்பிச்சுட்டான்.
          இன்னைக்குத்தான் சொன்னான்... அவன் 8 வது படிக்கும் போது, மதுரை கு ஒரு எக்ஸாம் எழுத கூப்டு போயிருந்தோம். அந்த எக்ஸாம் ஹால் ல இருந்த invigilator, "வலது கைல நீ வாங்குனா தான், நான் உனக்கு பேப்பர் தருவேன்" னு சொல்ல... இவன்,  "இல்ல மேடம், நான் லெப்ட் ஹேண்டர்" னு சொல்ல... அதுக்கு அவுங்க, "அதுனால என்ன.... நீ வலது கைல வாங்குனாதான் உனக்கு பேப்பர் தருவேன்" னு சொல்லி... கடைசில இவன் பெரிய தயக்கத்துக்கு பிறகு வலது கைல பேப்பர் அ வாங்கியிருக்கான் (யோசிச்சு பாருங்க... நாம (வலது கை பழக்கம் உள்ளவங்க) இடது கைல வாங்குவோமா... எவ்வளவு கஷ்டமா இருக்கும்...? அவ்வளவு கஷ்டத்தோட இருந்துருக்கான்).... இத இன்னைக்கு சொல்லி, feel  பண்ணுறான்.  நீ ஏன் அப்டி வாங்குன....? அவுங்கள்ட்ட "நான் வலது கைல வாங்குனா, உங்களுக்கு நான் disrespect பண்றதா ஆகிடும்" னு நீ  சொல்லிருக்க வேண்டியது தான னு.... இல்லைனா, "நான் எக்ஸாம் எழுதல" னு சொல்லிட்டு வெளில வந்து என்கிட்ட சொல்லிருக்க வேண்டியது தான னு சொன்னேன். ஆனா, இந்த ரெண்டு பதில் ல எத அவன் சொல்லிருந்தாலும், "திமிர பாரேன்... இந்த வயசுலயே" னு தான் சொல்லிருப்பாங்க.... "அப்பா அம்மா எப்படி வளத்துருக்காங்க பாரு" னு சொல்லிருப்பாங்க ( பல முறை, எங்க ரெண்டு பேருக்கும் குழந்தையை எப்படி வளக்கணும் னு லாம், ரொம்ப பேரு பாடம் நடத்திருக்காங்க). ரொம்பவே feel பண்ணிட்டான்.... இடது கைய யூஸ் பண்றது அவ்வளவு தப்பா னு, ரொம்பவே feel பண்ணிட்டான்.
             நாங்க, அவனோட இடது கை பழக்கம், எவ்வளவு பெருமையான விசயம்.... சமுதாயத்துல ரொம்ப கம்மியான ஆள்களுக்குத்தான் இடது கை பழக்கம் இருக்கும்.....அப்டி இருக்குறவங்க எவ்வளவு தனித்திறமைகளை (முகிலன், ஓவியம் நல்லா வரைவான் (https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16425952_1299331273438676_1291734299210777393_n.jpg?oh=1df8f385f03d7c6b27168b5dad069778&oe=5A0CB4B6) (http://epaperbeta.timesofindia.com/Gallery.aspx?eid=31807&id=07_02_2017_104_074_005&type=P&artUrl=WHEN-NOVICES-AND-EXPERTS-SHARED-THE-SAME-PLATFORM-07022017104074).... நல்லா புத்தகம் வாசிப்பான்.... நெறய கேள்விகள் கேப்பான்....) வச்சுருப்பாங்க..... நம்ம சொந்தகாரங்க, எங்களோட friends லாம் உன்ன பத்தி... உன்னோட lefthand  யூசேஜ் பத்தி எவளோ நல்லா பேசுறாங்க.... இடது கை பழக்கம்  உன்னோட குறை இல்லை, உன்னோட பலம்.... அந்த ஹோட்டல் ஓனர் நாம யோசிக்கிற மாதிரி யோசிச்சிருக்க மாட்டாரு.... அவருக்கு யாரும் அப்படி சொல்லிருக்க மாட்டாங்க... இல்லைனா, இதுதான் சீப் ஆ இருந்துருக்கும்... அதுனால வியாபார நோக்கத்துல அப்டி செஞ்சுருப்பாரு .....னு சொல்லி அவனை தேத்துனோம். 
              அப்புறமா, நான் சங்கீதா ட்ட...." அவன் கேட்ட கேள்விக்கு, நீ "ஆமா டா முகி... நீ சொல்றது சரிதான்... கஷ்டமா தான் இருக்கும் ல....? நாம இதுக்கு ஏதாவது செய்யணும் டா... நாம ட்ரை பண்ணுவோம்" னு அமைதியா  சொல்லிருக்கணும் னு அவன் எதிர்பார்த்திருக்கான் னு சொன்னேன். சங்கீதா சொன்ன பதில்லையும் குறை இல்லை... இப்படியே நாம அவன் feel  பண்றத சப்போர்ட் பண்ணி தடவிக் கொடுத்துட்டே இருந்தோம்னா, அவன் எப்படி சூழலை புரிஞ்சு நடக்க பழகுவான் னு அப்டி ஒரு பதிலை சொல்லிருக்கா. 
              இந்த சம்பவம் மூலம் கிடைத்த பாடங்கள்  ரெண்டு : 
1. சிறு பிள்ளைகளையும் அவர்களின் கேள்விகளையும் கையாள்வதில் பெருங்கவனம் செலுத்த வேண்டும் (சிறு பிசகும், பெருங்கவலை யைத் தந்துவிடும்). 
2. பொது இடங்களில், அனைவரும் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - எங்க வீட்டுல, எல்லா குழாய்கள்லையும் நடுவுல தான் திருகு இருக்கு... எல்லாரும் சிரமம் இல்லாம பயன்படுத்துற மாதிரி..... (அந்த ஹோட்டல் ஓனர் ட்ட போயி பேசலாம் னு இருக்கோம்).